தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழை தொடர்ந்து 10ம் வகுப்பு ஆங்கில விடைத்தாள் மாயம்

தமிழை தொடர்ந்து 10ம் வகுப்பு ஆங்கில விடைத்தாள் மாயம்

தமிழை தொடர்ந்து 10ம் வகுப்பு ஆங்கில விடைத்தாள் மாயம்


UPDATED : ஏப் 03, 2013 12:00 AM

ADDED : ஏப் 03, 2013 08:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2013 12:00 AM ADDED : ஏப் 03, 2013 08:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், பிளஸ் 2 தமிழ் முதற்தாள் தேர்வில் துவங்கிய குளறுபடி, 10ம் வகுப்பு ஆங்கில தேர்வு வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதற்தாள் தேர்வு நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 221 மாணவர்கள் ஆங்கிலம் முதல்தாள் தேர்வெழுதினர். இந்த விடைத்தாள்கள் உடனடியாக, தலைமையாசிரியர் பரந்தாமன் மேற்பார்வையில், "சீல்" வைக்கப்பட்டன. பகல், 2:04 மணிக்கு, சத்தியமங்கலம் துணை அஞ்சலகம் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ் வழி, ஆங்கில வழி என, விடைத்தாள்கள் இரண்டு பார்சல்களாக கட்டப்பட்டு இருந்தன. இந்த பார்சல்களை, அஞ்சலக புறநிலை ஊழியர் மூலம் திண்டிவனம், ஆர்.எம்.எஸ்., அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். பார்சல் பையுடன், மாலை, 5:30 மணிக்கு, 14ம் எண் டவுன் பஸ்சில், அஞ்சலக ஊழியர் செஞ்சிக்கு வந்தார்.

அங்கிருந்து, வள்ளி செல்வன் என்ற தனியார் பஸ்சில், திண்டிவனம் சென்றார்.ஒரு பை "மிஸ்சிங்&': இதே பஸ்சில், செஞ்சி தாலுகாவில் உள்ள மற்ற அஞ்சலகங்களில் இருந்தும் தபால் பைகள் கொண்டு வரப்பட்டன. மொத்தம், 17 தபால் பைகள் இருந்தன. இரவு, 8:00 மணியளவில், திண்டிவனத்தில் இறங்கும் போது, 16 பைகள் மட்டும் இருந்தன.

சத்தியமங்கலத்தில் இருந்து எடுத்து சென்ற பையை காணவில்லை. பார்சல் பை காணாமல் போனதை அறிந்த அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் உத்தரவை அடுத்து, அன்று இரவே அஞ்சலக ஊழியர்கள், பார்சல் பையை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை வரை, விடைத்தாள் பை கிடைக்கவில்லை.

இதற்குள், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு பார்சல் சென்று சேரவில்லை என்பது, காலை 9:00 மணிக்கு கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இவர்கள் கொடுத்த தகவலையடுத்து, விழுப்புரம் கலெக்டர் சம்பத், எஸ்.பி., மனோகரன், ஆர்.டி.ஓ., மீனா பிரியதர்ஷினி, தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர், சத்தியமங்கலம் பள்ளியிலும், துணை அஞ்சலகத்திலும் விசாரணை நடத்தினர்.

காணாமல் போன அஞ்சல் பையை, செஞ்சி பஸ் நிலையத்தில், எஸ்.பி., மனோகரன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், தேடுதல் வேட்டை நடத்தினர். பின், அஞ்சலக புறநிலை ஊழியர் சவுந்தர்ராஜன், தனியார் பஸ் கண்டக்டர் முருகேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நான்கு போலீஸ் தனிப்படையினர், தனியார் பஸ் நின்று சென்ற அனைத்து நிறுத்தங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

விடைத்தாள் பார்சல் பையை கொண்டு சென்ற, புறநிலை ஊழியர் சவுந்தர்ராஜன், பணியில் இருக்கும் போதும் போதையில் இருப்பது வாடிக்கை. இவர், செஞ்சியில் இருந்து பஸ் ஏறும் போதும் இதே நிலையில் இருந்ததால், வழியில் பார்சல் பை தவறியது, இவரின் கவனத்திற்கு வராமல் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதுவரை நடந்துள்ள விசாரணையில், போலீசாரும், வருவாய்த் துறையினரும் பார்சல் பை தொலைந்து போன கோணத்திலேயே விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்போதும் போதையில் இருக்கும் சவுந்தர்ராஜனை சிக்க வைக்க, யாரேனும் பின்தொடர்ந்து பைகளை எடுத்திருக்க வாய்ப்புள்ளது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் காணாமல் போனது, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, திண்டிவனத்தில், அஞ்சல் ஊழியர், பஸ்சில் இருந்து இறங்கிய பின் தெரிய வந்தது. உடனே அவர், அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இரவு முழுவதும், அஞ்சல் துறையினர், போலீசில் புகார் செய்யவில்லை. நேற்று காலை, 9:00 மணிக்கு, செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில், திண்டிவனம் அஞ்சல் துறை துணை கண்காணிப்பாளர் புகார் செய்துள்ளார்.

பை காணாமல் போய், 13 மணி நேரம் கழித்து, மிகவும் தாமதமாக புகார் கொடுக்கப்பட்டது. "பை காணவில்லை" என, உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்தால், கண்டுபிடிப்பது சுலபமாக இருந்திருக்கும். அஞ்சல் துறையினரின் அலட்சியத்தால், மாயமான பையை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us