ஆதிச்சநல்லுாரில் அருங்காட்சியகம் ரூ.162 கோடி ஒதுக்கியது ஏ.எஸ்.ஐ.,
ஆதிச்சநல்லுாரில் அருங்காட்சியகம் ரூ.162 கோடி ஒதுக்கியது ஏ.எஸ்.ஐ.,
UPDATED : மே 17, 2026 11:44 AM
ADDED : மே 17, 2026 11:45 AM
துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில் கள அருங்காட்சியகம் அமைக்க, மத்திய தொல்லியல் துறை, 162 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
மத்திய தொல்லியல் துறை சார்பில், சிந்துவெளி, பவுத்தம், இரும்புகால நாகரிகங்களை வெளிப்படுத்தும் இடங்களை மேம்படுத்த, 1,481 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் தமிழகத்தின் ஆதிச்சநல்லுார்; உத்தர பிரதேசத்தின் சாரநாத், ஜான்சி, ஹஸ்தினாபூர்; கர்நாடகாவின் உதயகிரி, சன்னதி, ஹரியானாவின் அக்ரோஹா, ராக்கிகர்ஹி உள்ளிட்ட இடங்களில், ஐந்தாண்டு கால வரம்புடன், மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன.
தமிழகத்தின், துாத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில், 4,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட, இரும்புகால மக்கள் பயன்படுத்திய, இரும்பு வாள், ஈட்டி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், வெண்கல பாத்திரங்கள், தங்க நெற்றிப்பட்டம் உள்ளிட்ட ஆபரணங்கள் கிடைத்துள்ளன.
இரும்பு, வெண்கலம், தங்கம் உள்ளிட்ட உலோகங்களை பிரித்தெடுத்து, உரிய பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை, அந்த ஊர் மக்கள் அறிந்திருந்தனர்.
மேலும், மண்பாண்டங்களில் குறியீடுகளையும், பல்வேறு உருவங்களையும் பதிக்கும் தொழில்நுட்பங்களை அறிந்ததுடன், அவர்கள் வெளிநாட்டினருடன் வணிகத் தொடர்பிலும் இருந்துள்ளனர்.
இத்தகைய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த, ஆதிச்சநல்லுார் அகழாய்வு தளத்தில் கிடைத்துள்ள தொல்பொருட்களையும், அகழாய்வுக் குழிகளையும், அதே நிலையில், பொதுமக்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் காணும் வகையில், உயர்தொழில்நுட்ப கண்ணாடி தரையுடன், கள அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, மத்திய தொல்லியல் துறை, 162 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை, மத்திய தொல்லியல் துறை, உலகத்தரத்தில் அமைக்க உள்ளதால், ஆதிச்சநல்லுார், உலக கலாசார வரைபடத்தில் இடம்பெறும்.
