UPDATED : ஜூன் 06, 2021 12:00 AM
ADDED : ஜூன் 06, 2021 08:56 AM
புதுச்சேரி:
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் கிடையாது. இதனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்கள் தமிழக பாட திட்டத்தையும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர மாநில பாட திட்டத்தையும், மாகி பிராந்தியத்தில் கேரள மாநில பாட திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், அந்தந்த மாநில கல்வித்துறை எடுக்கும் முடிவுகளையே புதுச்சேரி அரசு பின்பற்றி வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து, நேற்று இரவு அறிவித்தது. இதனால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, &'&'புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் கிடையாது. புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு தமிழக கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தையே பின்பற்றி வருகிறோம். அவர்களின் முடிவே புதுச்சேரிக்கும் பொருந்தும்.
இருப்பினும், தேர்வு ரத்து குறித்து தமிழக அரசின் முறையான அரசாணை கிடைக்கப் பெற்றதும், அதனை பின்பற்றி, தேர்வு ரத்து குறித்து முறையான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடும்&'&' என்றனர்.
