UPDATED : ஏப் 30, 2011 12:00 AM
ADDED : ஏப் 30, 2011 10:19 AM
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக வைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவு வெளிவந்த ஓரிரு நாளில் இருந்து, பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே 16 முதல் வழங்கப்பட இருப்பதால், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களும், இதே தேதியில் இருந்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில், 65 சதவீத இடங்கள் (ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 500 இடங்கள்) கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்வர் என எதிர்பார்க்கப்படுவதால், இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களுடன், பொறியியல் கல்லூரிகளைப் பற்றிய விவரங்கள் அடங்கிய, பிராஸ்பெக்டஸ் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை குறித்த முழு விவரங்களை, மே முதல் வாரத்தில் அண்ணா பல்கலை அறிவிக்கும் என தெரிகிறது.
