UPDATED : ஜன 04, 2011 12:00 AM
ADDED : ஜன 04, 2011 10:59 AM
பாட்னாவில் செயல்பட்டு வரும் "சூப்பர் 30' பயிற்சி நிறுவனம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் துவங்கப்பட உள்ளது. இதனால் பொருளாதராத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ., தேர்வு நடத்தப்படுகிறது. பீகாரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் "ராமானுஜன் ஸ்கூல் ஆப் மேத்தமெட்டிக்ஸ்' நிறுவனத்தை 2002ம் ஆண்டு தொடங்கினர். இதன் மூலம் ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இலவசமாக ஜே.இ.இ., தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் படித்த மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் கிளைகளை அனைத்து மாநிலங்களிலும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: "நாட்டில் நன்றாக படிக்கும் அதிகளவிலான மாணவர்கள் வறுமை காரணமாக அவர்களால் உயர்கல்வியை அடைய முடிவதில்லை. எனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது தான் "சூப்பர் 30'.
தற்போது பாட்னாவில் மட்டும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதே எனது கனவு. எனவே அனைத்து மாநிலங்களிலும் பயிற்சி நிறுவனத்தின் கிளைகளை துவக்க திட்டமிட்டுள்ளேன். குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது ஒன்று மட்டுமே, உங்களது குடும்பத்தை முன்னேறுவதற்கான வழி என்று பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு நான் தெரிவிக்கும் கருத்து' என்றார்.
