சித்தா மருத்துவத்தில் 500 இடங்கள் காலி; விண்ணப்பிக்காதவர்களும் சேர வாய்ப்பு
சித்தா மருத்துவத்தில் 500 இடங்கள் காலி; விண்ணப்பிக்காதவர்களும் சேர வாய்ப்பு
UPDATED : நவ 24, 2023 12:00 AM
ADDED : நவ 24, 2023 07:48 PM
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளில், அரசு கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,226 இடங்கள் உள்ளன.அதேபோல, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 313; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 533 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். இதில், அரசு மருத்துவ கல்லுாரி இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.அதேநேரம், தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான, 500 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில், ஆயுஷ் அமைச்சகம், நீட் தகுதி தேர்வுக்கான மதிப்பெண்களை குறைத்துஉள்ளது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கு 122 மதிப்பெண்களும், மற்ற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 96 மதிப்பெண்களும், மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களாக உள்ளன என மருத்துவ மாணவர் தேர்வு குழு தலைவர், மலர்விழி கூறியுள்ளார்.நேரடி சேர்க்கை
அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் வகையில், சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில், நேரடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், நேரடியாக விண்ணப்பித்து, அன்றே விருப்பமான கல்லுாரிகளில் சேரலாம்.
