UPDATED : ஜன 11, 2010 12:00 AM
ADDED : ஜன 11, 2010 11:21 AM
புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, ஒரே நாளில் மட்டும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கிச் சென்றனர். சென்னை 33வது புத்தகக் கண்காட்சி, ஷெனாய் நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடந்தது. 12 நாட்கள் நடந்த இந்த புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.
மொத்தம் 606 அரங்கங்களுடன் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சி நடந்த நாட்களில், 10 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டனர்; 7 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகின. கண்காட்சியில் கடந்த 9ம் தேதி மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதில் வாங்கப்பட்ட புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் தரப்பட்டது.
கண்காட்சிகளுக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினர், சேது சொக்கலிங்கம் தலைமையில் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவின் நிறைவு நாள் இறுதி நாளான நேற்று மாலை நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் உபயதுல்லா தலைமை வகித்தார். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், அரசு செயலர் உதயசந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் வரவேற்றார். செயலர் ராம.லட்சுமணன் நன்றி கூறினார். விழாவில் விளம்பரதாரர்களுக்கும், கண்காட்சியை நடத்த நிதி வழங்கியவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
