UPDATED : ஏப் 13, 2011 12:00 AM
ADDED : ஏப் 13, 2011 12:56 PM
மைசூரு அருகே உள்ள வித்யாரண்யபுரத்தைச் சேர்ந்தவர் புட்டவீரம்மா (93). இவர் 1918ம் ஆண்டு பிறந்தார். அவர் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, அவரது தந்தையார் இறந்து விட்டார்; 15வது வயதில், தாயாரும் இறந்து விட்டார். உறவினர்களும், அவரை கைவிட்டு விட்டனர். இதனால், படிக்க வாய்ப்பின்றி, பிழைப்புக்காக, கட்டட வேலை, வீட்டுவேலை செய்து வந்தார். பின், மைசூர் பட்டு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார்.
கடந்த 1974ம் ஆண்டில், பணி ஓய்வு பெற்ற புட்டவீரம்மா, தனது தனிமையை போக்குவதற்காக, தனது ஓய்வூதியத்தைக் கொண்டு, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். எனினும், அவரை தனிமையும், வெறுமையும் வாட்டியது. ஆன்மிக நிகழ்ச்சிகளை விட, கல்விப் பணியாற்றுவதன் மூலம், சமுதாயத்திற்கு சிறந்த சேவையை அளிக்க முடியும் என்று முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த 1989ம் ஆண்டு, புட்டவீரம்மா தனது வீட்டிலேயே சிறிய அளவிலான கல்வி நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் மூலம், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த, வாய்பேச முடியாத மற்றும் காதுகேளாத பெண் பிள்ளைகளுக்கு, உரிய ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கத் தொடங்கினார்.
தொடக்கத்தில், 10 மாணவியர் மட்டுமே படித்த அவரது பள்ளிக்கூடத்தில், தற்போது, நூற்றுக்கும் அதிகமான மாணவியர் பயிலுகின்றனர். இத்தகைய மாற்றுத் திறனாளி மாணவியரை, தானே தேடிக் கண்டுபிடித்து, தன் கல்வி நிறுவனத்தில் சேர்த்து, கல்வி கற்பிக்கிறார்.இந்த கல்வி நிறுவனத்தை நடத்துவதற்கு, ஆரம்பத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியில் தவித்த புட்டவீரம்மா, வீடு வீடாகச் சென்று, தன் கல்வி நிறுவனத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, உதவிகள் பெற்று வந்தார்.
அவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு, 1997ம் ஆண்டு, புட்டவீரம்மாவுக்கு, "ராஜிவ்காந்தி மானவ் சேவா&' விருதை வழங்கி கவுரவித்துள்ளது. அதன் பின், உதவிகள் குவிந்தன. கடந்த 20 ஆண்டுகளாக கல்விப் பணி செய்துவரும் புட்டவீரம்மாவுக்கு தற்போது, 93 வயதாகிறது. முதுமையை பொருட்படுத்தாமல், தொடர்ந்து, மாற்றுத் திறனாளி மாணவியருக்கு, கல்விச் சேவையை ஆற்றி வருகிறார்.
நிதி என்றோ, மனிதர்கள் என்றோ எந்த விதமான ஆதாரமும் இன்றி, பெரிதாக படிப்பறிவும் இல்லாத புட்டவீரம்மா, தன்னால் இயன்றதை இந்த சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும் என்று முனைந்ததன் காரணமாகத்தான் இப்படி ஒரு கல்வி நிலையம் உருவாகியுள்ளது. புட்டவீரம்மா என்பவர் நமக்கு அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் எந்த சுய நலமும் இல்லை.
இந்த தள்ளாத முதுமையிலும், சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தள்ளாடவில்லை என்பது அவரை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமாகிறது.
ஆனால், மாணவர்களாகிய நமக்கோ, நமது பெற்றோர் படிப்பதற்கு ஆதாரமாக இருக்கின்றனர். படித்து முன்னேறினால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற சுயநலம் உள்ளது. நமது படிப்பினால், இதுபோன்ற பல சமுதாய சேவைகளை நம்மால் ஆற்ற முடியும் என்ற பொது நலமும் உள்ளது.
எனவே, மாணவர்களாகிய நாம், நமது படிப்பால் நிச்சயமாக இந்த சமுதாயத்திற்கு பயன்படக் கூடிய பணியை ஆற்றும் வகையில் நமது சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
காசையோ, பணத்தையோ தானமாகக் கொடுத்தால் அது செலவழிந்துவிடும். ஆனால் கல்வியை தானமாக அளித்தால், அது அவர்களது வருங்கால சந்ததியினர் வரை தொடரும். எனவே, நம்மால் இயன்ற உதவியை படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு செய்வோம் என்ற உறுதியை இந்த நிமிடத்தில் ஏற்போம்.
நாமும் படிப்போம், மற்றவருக்கும் படிப்பறிவிப்போம்.
