UPDATED : ஆக 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தற்போது மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நடைபெறும் நிலையில் ஆகஸ்ட் 22ம் தேதி வரை 69,823 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 33 ஆயிரத்து 845 பேர் கவுன்சலிங்கிற்கு வரவில்லை. 22ம் தேதி மாலை நிலவரப்படி இன்னமும் 12,724 இடங்கள் காலியாக உள்ளன.
26ம் தேதி மூன்றாவது கட்ட கவுன்சிலிங் முடிவடைந்த பிறகு ஆகஸ்ட் 27ம் தேதி இதுவரை கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக துணை கவுன்சிலிங் நடைபெறுகிறது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாங்கள் விரும்பிய கல்லூரி மற்றும் படிப்பு இல்லாததாலேயே பலர் கவுன்சிலிங்கின் போது, இடங்களைப் பெற்றுக் கொள்ளாமலேயே சென்று விடுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்ஜினியரிங் பிரிவில் சேர வேண்டும் என்ற துடிப்பு மாணவர்களிடம் காணமுடிந்தது. 22 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்காக 33 ஆயிரம் மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள இருக்கின்றனர். எம்.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இடங்களே தற்போது அதிக அளவில் காலியாக உள்ளன.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் 17 கல்லூரிகள் முழுமையாக தங்கள் இடங்களை பூர்த்தி செய்து விட்டன. ஒன்று மட்டும் தனியார் கல்லூரி மற்ற அனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுõரிகள்தான். இரண்டாம் கவுன்சிலிங் முடிவில் அனைத்து இடங்களையும் பூர்த்தி செய்த அந்த ஒரே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பெருந்துறையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் அண்டு டெக்னாலஜிதான்.
புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு கல்லூரிகளிலும் இடங்கள் வேகமாக தீர்ந்துவிட்டன. தனியார் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பிற வசதிகளை பார்க்கும் மாணவர்கள், அரசு கல்லூரிகளில் அவை செய்து தரப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் ஏராளமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
25 முக்கிய கல்லூரிகளில் ஒரு சில இடங்களே உள்ளன. இவை அனைத்தும் கோவை மற்றும் சென்னை பகுதியில் உள்ள கல்லூரிகள். இந்த 25 கல்லூரிகளில் 4 கல்லூரிகள் புதிதாக துவங்கப்பட்ட சுயநிதி கல்லூரிகள் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
மொத்தமுள்ள 340 இன்ஜினியரிங் கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவு, புயல் வேகத்தில் தீர்ந்து விட்ட நிலையில், 33 கல்லூரிகளில் மட்டுமே இப்பிரிவு இன்றும் காலியாக உள்ளது. இக்கல்லூரிகளில் பொதுப்பிரிவில் கூட, இப்பிரிவுக்கு இடங்கள் காலியாக உள்ளன.
ஆச்சரியப்படும் வகையில், சேலத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாவது கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையிலும் ஒரு இடம் கூட பூர்த்தியாகாமல் இருந்தது. தற்போது துவங்கப்பட்ட 13 பெண்கள் இன்ஜினியரிங் கல்லூரிகளில், இரண்டு அல்லது மூன்று கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளில், ஒரு சில இடங்களே பூர்த்தியாகி உள்ளன. மாணவிகள் பெண்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் போலவே, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு வேகமாக தீர்ந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மெக்கானிக்கல் பிரிவுக்கு கூடுதல் செல்வாக்கு இருந்தது. சில கல்லுõரிகளில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவு பூர்த்தியாகும் முன்னரே மெக்கானிக்கல் பிரிவு முடிந்துவிட்டது. பி.சி., மற்றும் எம்.பி.சி., பிரிவினர் இந்நிலையை உணர முடிந்தது.
தற்போது தமிழகத்தில் 197 கல்லூரிகளில் மெக்கானிக்கல் பிரிவு உள்ளன இவற்றில், 7 கல்லூரிகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களும் முடிந்துவிட்டன. ஆட்டோமொபைல் மற்றும் புரடக்ஷன் இன்ஜினியரிங் பிரிவுகளும் முடிந்துவிட்டன.
ஆட்டோமொபைல் வழங்கும் 12 கல்லூரிகளில் பி.சி., மற்றும் பொதுப்பிரிவினருக்கான இடங்கள் முடிந்துவிட்டன. புரடக்ஷன் வழங்கும் 4 கல்லுõரிகளில் 4 இடங்களே காலியாக உள்ளன.
இதுகுறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி தெரிவித்தபோது, மெக்கானிக்கல் பிரிவுடன் தொடர்புடைய பிறப் பாடப்பிரிவுகளையும் மாணவர்கள் விரும்பி தேர்வு செய்தனர் என்றார். டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி மற்றும் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளை மாணவர்கள் விரும்பவில்லை. டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பாஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளிலும் மாணவர்கள் அதிகம் போட்டியிட்டு தேர்வு செய்யவில்லை.
பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு...
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைபெறுவதால், கணிதம், இயற்பியில் மற்றும் வேதியல் பிரிவு பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் உபயோகமாக இருக்கும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் ஸ்கோர் செய்த மாணவர்கள் எண்ணிக்கை ஏராளமாக இருந்ததால், குறிப்பிட்ட கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர கடந்த ஆண்டு இருந்த கட்-ஆப் மதிப்பெண்ணை விட இந்த ஆண்டு அதிகரித்துவிட்டது. இந்நிலை அடுத்த ஆண்டும் நீடிக்க வாய்ப்புள்ளது.
கவுன்சிலிங் துவங்கும் முதல் வாரத்துக்குள் நீங்கள் கவுன்சிலிங் செல்ல வேண்டுமானால் கட்-ஆப் 192க்கும் அதிகமாக இருக்க வேண்டும். குறிப்பாக முதல் இரண்டு மூன்று நாட்களுக்குள் கவுன்சிலிங் சென்றுவிடுவது, நீங்கள் நினைத்த கல்லூரியில் நினைத்த பாடத்தை எடுத்து படிக்க உதவும். இப்போது படிப்பில் முழு அக்கறை செலுத்தவில்லை என்றால், அதன் பலனை கவுன்சிலிங்கின் போதுதான் உணர்வீர்கள்.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வந்துள்ள பல மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை விட, கிடைக்கும் கல்லூரியை எடுக்கும் நிலையில்தான் உள்ளார்கள். ஆகவே போட்டி மிக்க இந்நேரத்தில் உங்களுக்கு மதிப்பெண்களை கைகொடுக்கும். கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடப்படும். பாடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளன. இப்போதே இப்போதே திட்டமிட்டு படியுங்கள்! வெற்றி பெறுங்கள்!!

