ஐதராபாத்தில் டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் வளாகம்!
ஐதராபாத்தில் டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் வளாகம்!
UPDATED : அக் 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இந்த புதிய வளாகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் அடிக்கல் நாட்டுவார் என்று தெரிகிறது.
மும்பையில் செயல்பட்டு வரும் டி.ஐ.எப்.ஆர். எனப்படும் டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் என்ற கல்வி நிறுவனம் நாட்டில் உள்ள முன்னோடி ஆய்வு நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது.
ஹோமிபாபாவின் நூற்றாண்டையொட்டி ஐதராபத்தில் டி.ஐ.எப்.ஆர். வளாகத்தைத் தொடங்குவதற்கான அனுமதியை டி.ஐ.எப்.ஆர்., இயக்குநர் முஸ்டன்சர் பார்மா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைச் சந்தித்து கேட்டார். புதிய கல்வி நிறுவனத்தை அமைக்க ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் 210 ஏக்கர் நிலத்தை அளிக்கும்படி டி.ஐ.எப்.ஆர்., ஆந்திர மாநில முதல்வரைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அடுத்த 12லிருந்து 15 ஆண்டுகளுக்குள் இந்தக் கல்வி நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக ரூ.2,500 கோடி அளவுக்குச் செலவிடப்படும் என்று பார்மா தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் சர்வதேச போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் ஐதராபாத் அமைந்துள்ளதால், டி.ஐ.எப்.ஆரின் இரண்டாவது வளாகத்தை ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்தோம். புதிய வளாகத்தில் 200 ஆசிரியர்களும் ஆயிரம் மாணவர்களும் இருப்பார்கள். பிஎச்.டி. முடித்த பிறகு அடுத்த கட்ட ஆய்வை மேற்கொள்ளும் 300 ஆய்வாளர்களுக்கும் இடம் அளிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் டி.ஐ.எப்.ஆர்., கல்வி நிறுவனத்திற்கு இடம் அளிக்கும் யோசனையை மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சய்யீத் இ. ஹஸ்நைன் வரவேற்றுள்ளார். இதுபோன்ற சிறந்த ஆய்வு நிறுவனம் பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பதால், பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும் பயன் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
