அலிகார் முஸ்லிம் பல்கலை. 5 நகரங்களில் புதிய வளாகங்கள்!
அலிகார் முஸ்லிம் பல்கலை. 5 நகரங்களில் புதிய வளாகங்கள்!
UPDATED : அக் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மத்திய பிரதேசத்தில் போபாலிலும் மகாராஷ்ரத்தில் புனேயிலும் மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத்திலும் கேரளத்தில் மலப்புரத்திலும் பிகாரில் கத்திஹாரிலும் இந்த வளாகங்களைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் செயல்படுவது மாதிரியே இந்த மண்டல வளாகங்களும் செயல்படும். மருத்துவக் கல்லூரி, பல் மருத்தவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, லா ஸ்கூல், பிசினஸ் ஸ்கூல் மற்றும் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற வகையில் பல்வேறு துறைகளுடன் மண்டல வளாகங்கள் இயங்கும்.
நாட்டில் உள்ள முஸ்லிம்களின் சமூக கல்வி மேம்பாட்டுக்காகச் செயல்படுவதே அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. மத்திய அரசு நியமித்த நீதிபதி சச்சார் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக மண்டல வளாகங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளது என்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.கே. அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
சர்ச்சார் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, 11-வது திட்டக் காலத்தில் மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வலாகத்தைத் தொடங்குவது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் பிரதமரைக் கேட்டுக் கொண்டார். போபாலில் இப்பல்கலைக்கழக வளாகத்தைத் தொடங்குவது தொடர்பாக காரீப் நாஸ் பவுண்டேஷன் சார்பில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வடக்கு கேரளத்தில் வளாகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேரள மாநில தலைமைச் செயலர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகக் கவுன்சில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மண்டல வளாகங்களைத் தொடங்கத் தீர்மானித்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு மையத்தையும் உருவாக்க ரூ.400 கோடி வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரம் கோடி தேவைப்படும். இதற்கான விரிவான மதிப்பீட்டுத் திட்டத்தை பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. செலவு நிதிக் குழுவும் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவும் இத்திட்டத்திற்கான நிதியை வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக 1875ல் பள்ளியாகத் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் பின்னர் கல்லூரியாக மாறி 1920ம் ஆண்டில் மத்திய பல்கலைக்கழகமாக வளர்ந்தது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பள்ளி கல்வி போர்டு 5 உயர்நிலைப் பள்ளிகளையும் இரண்டு சீனியர் செகண்டரி பள்ளிகளையும் நடத்துகிறது.
மகளிர் கல்லூரி, பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, லா ஸ்கூல், பிசினஸ் ஸ்கூல், 93 துறைகளைக் கொண்ட பல்கலைக்கழகம் இது. சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், நீதிபதிகள் என்று பல்வேறு துறைகளில் முக்கியப் பிரமுகர்களை உருவாக்கிய பெருமை மிகு பல்கலைக்கழகமாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் திகழ்கிறது.
