தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சந்திரயான் திட்ட இயக்குநர் அண்ணாதுரையுடன் பிரத்யேக பேட்டி

சந்திரயான் திட்ட இயக்குநர் அண்ணாதுரையுடன் பிரத்யேக பேட்டி

சந்திரயான் திட்ட இயக்குநர் அண்ணாதுரையுடன் பிரத்யேக பேட்டி


UPDATED : அக் 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சந்திரயான் திட்டத்தின் இயக்குநராக இருந்து திட்டத்தின் முழுப் பொறுப்பை ஏற்று கடந்த பல மாதங்களாக விஞ்ஞானிகளுடன் இரவு பகலாக உழைத்திருக்கிறார். பொள்ளாச்சி அருகே உள்ள கொத்தவாடி இவரது சொந்த ஊர். கோவை அரசு மற்றும் பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரிகளில் பயின்று 1982ம் ஆண்டில் இஸ்ரோவில் சேர்ந்தார். சந்திரயான் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு முன்னதாக அண்ணாதுரை அளித்த பிரத்யேக பேட்டி:


உடனடியாக பலன் தரக்கூடிய திட்டங்களுக்கே இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) இதுவரை முக்கியத்துவம் தந்து வந்தது. தற்போது அறிவியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க துவங்கியிருக்கிறதா?


இஸ்ரோவின் துவக்கம் அறிவியல் ஆய்வுகளுடன்தான் இருந்தது. வளிமண்டல ஆய்வுகள் அப்போது நடந்தன. விஞ்ஞானி சாராபாய் இருந்தபோது தும்பாவில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து உடனடியாக பயன்தரும் விஷயங்கள் தொடர்ந்தன. செயற்கைக்கோள்களும் முதலில் அறிவியல் ஆய்வுகளுக்காக ஏவப்பட்டன.


சந்திராயன் திட்டத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் செலுத்தும் திட்டம் எனலாம். இந்த திட்டத்தை பிற்காலத்தில் பலன்தருவதாக மாற்றிக் கொள்ள முடியும்.


நிலவில் சந்திராயன் எது தொடர்பாக ஆய்வு செய்யும்?


சந்திராயன் செயற்கைக்கோள், நுõறு கி.மீ., உயரமுள்ள சுற்றுப்பாøதிலிருந்து சந்திரனை சுற்றி வரும். இத்திட்டத்தில் சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா என்பதை கண்டறிய முயற்சி செய்வோம். சந்திரனில் தண்ணீர் இருப்பதாக 1998ல் கூறப்பட்டது. ஆனால் இதுவரை அதை ஆதாரங்களுடன் யாரும் நிரூபிக்கவில்லை.


சந்திராயன் 2 திட்டத்தில் ரோபோவால் ஆன ரோவர் சந்திரனில் இறக்கப்படும். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த நாசாவின் ரோவர் போல் இது சந்திரன் செயல்பட்டு அங்கு தண்ணீர் இருக்கிறதா என்பதை உறுதி செய்யும். நமது மனித நாகரிகங்கள் ஆற்றங்கரையில் தோன்றியதால் நிலவில் தண்ணீர் இருக்கும் இடத்தில் நம் ஆராய்ச்சியை துவக்குவது நல்லது.


சந்திராயன் திட்டத்தால் இந்தியாவுக்கு பலன் இருக்கிறதா?


தற்போது அணு உலைகளில் அணுப்பிளவு மூலம் எரிசக்தி பெறுகிறோம். அணு இணைவு எரிசக்தி (சூரியனில் இதுபோன்று தொடர்ச்சியாக நடைபெறுவாதல்தான் நாம் சக்தி பெறுறோம்) ஆய்வு தற்போது உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. (இதுபோன்ற வசதியை நாம் பெற்றால் எதிர்காலத்தில் சிக்கனமாக மின் உற்பத்தி செய்து கொள்ள முடியும்) இந்த திட்டம் வெற்றி பெறும் போது, இதுபோன்ற அணு இணைவு அணு உலைகளிலிருந்து எரிசக்தி பெறத் தொடங்கிவிடுவோம்.


இந்த மின் உலைகளை இயக்க ஹீலியம்3 எனும் எரிபொருள் தேவை. இந்த வாயு பூமியில் அவ்வளவாக இல்லை. இதை நாம் விண்வெளியிலிருந்து பெற முடியும். நமக்கு அருகில் இதை எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரே இடம் சந்திரன்தான்.


சந்திரனிலிருந்து ஒரு சில டன் ஹீலியம் கொண்டு வந்தால் கூட, நாம் இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை சில ஆண்டுகளுக்கு பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அது சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான். சந்திராயன் திட்டம் ஒரு சிறிய துவக்கம்தான். அது எதிர்காலத்தில் பெரிய பயன்களை அளிக்கவல்லது. முதல் அடி எடுத்து வைக்காமல் எவரெஸ்டுக்கு கூட யாரும் போக முடியாது. சந்திராயன் 1 முதல் அடி என்றே சொல்லாம்.


சந்திராயன் திட்டத்தால் உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்திருக்கிறதா?


அமெரிக்கா, ரஷ்யாகூட நிலவுக்கு செல்வது குறித்து மீண்டும் பரிசீலித்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு பிப்.மார்ச்சில் அமெரிக்காவும் சந்திராயன் போன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளும் திட்டமிட்டு வருகின்றன. சீனா, ஜப்பான் நாடுகளும் முயற்சியை துவக்கியுள்ளன. ஆகவே இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வது இந்நேரத்தில் இந்தியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.


சந்திராயனில் நம் நாட்டின் 6 கருவிகளுடன் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த கருவிகள் இடம்பெற்றுள்ளன. இத்தருணத்தில் இந்த உலகத்துக்கு நாம் யார் என்பதை வெளிப்படுத்துகிறோம். சந்திரன் புள்ளிவிபரங்களை நம் வழியாகத்தான் இந்நாடுகள் பெறவிருக்கின்றன. இந்தியாவில் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்பது அப்போது உறுதி செய்யப்படும். நாம் செய்யும் ஆய்வுகளை எதிர்காலத்தில் யாரும் திரும்ப செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் இந்த துறையில் நாம் முன்னோடியாக விளங்குவோம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உபகரணங்களை இயக்குவது நாம்தான். நாம் சுயமாக ஏவுவதோடு பிறருக்கும் உதவுகிறோம். வாய்ப்பு அளிக்கிறோம்.


சந்திராயன் திட்டத்தால் சந்திரனில் இந்தியா ஏதும் உரிமை கொண்டாட முடியுமா?


இன்டர்நேஷனல் லூனார் நெட்வொர்க் (சர்வதேச நிலவு கூட்டமைப்பு) அமைக்க நாசா திட்டமிட்டு வருகிறது. நிலவை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் இயங்கும். சந்திராயன் திட்டத்தால் சந்திரனைப் பற்றிய தகவல்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கும். இக்கூட்டமைப்பில் இந்தியா ஒரு நாடாக உள்ளது. செயற்குழு உறுப்பினராக என்னையும் இதில் சேர்த்திருக்கிறார்கள். இதில் 56 நாடுகள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். சந்திரன் குறித்த தகவலை கொண்டிருக்கும் நாடு என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் இந்தியாவும் சம உரிமையுடன் இத்திட்டத்தில் பங்கேற்கும்.


பிற்காலத்தில் சந்திரனில் முக்கியமான விஷயம் ஏதாவது நடக்கும் போது இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப ரீதியாகவும் 120 கோடி மக்கள் கொண்ட இந்தியாவும் பின் தங்கியது இல்லை என்ற நிலை உருவாகும். சந்திரனை ஒரு குறிப்பிட்ட நாடு மட்டும் சொந்தம் கொண்டாட முடியாத நிலை உருவாகும்.


தகவல் தொடர்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு சந்திரனை பயன்படுத்திக் கொள்ள முடியுமா?


இதற்கான சாத்தியக்கூறு உள்ளது. நிலவை பயன்படுத்தினால் செயற்கைக்கோளை பராமரிக்க வேண்டியது இல்லை. ஆனால் நிலவு தொலைவில் துணைக்கோள். 25 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டத்தில் இதுபோன்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அந்த மாநாட்டில் சந்திரனுக்கு மீண்டும் செல்வதற்கான காரணங்களை ஆராய்ந்த போது, ஒன்றல்ல இரண்டல்ல 200 காரணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டன.


சந்திரனுக்கு செல்வதில் விரைவாகவும் செலவு குறைவானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். நிலவின் ஒரு பகுதி எப்போதும் பூமியை நோக்கித் திரும்பியிருக்கிறது. இது தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியும் ஆனால் அதற்கு கருவிகள் மேம்பட வேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us