ஆங்கிலத்துக்கு இந்தி மாற்றாகாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
ஆங்கிலத்துக்கு இந்தி மாற்றாகாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
UPDATED : அக் 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டபோது, இந்தி மற்றும் பிராந்திய மொழிகள், அதிகாரபூர்வ அலுவல் மொழிகளாக வகுக்கப்பட்டன. ஆங்கில மொழி பழக்கத்தில் இருந்தாலும், சிறிது, சிறிதாக, 15 ஆண்டுக்குள் ஆங்கிலத்தை முழுமையாக அகற்றிவிட்டு, இந்தி மொழியாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.
இதைச் சுட்டிக்காட்டி, இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, பிரமோத் யாக்னிக் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் பெஞ்சுக்கு உதவியாக இருக்கும் வகையில், மூத்த வக்கீல், நிதேஷ் குப்தா, கோர்ட் அதிகாரியாக செயல்பட்டார்.
இந்தியாவில் வசிப்பவர்களில் 90 சதவீதம் பேர் ஆங்கிலம் பேசுவதோ அல்லது புரிந்து கொள்வதோ இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும், வேலை வாய்ப்புகளின் போது, ஆங்கிலம் தான் முக்கிய திறனாக கருதப்படுகிறது என்று வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், 90 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை, கோர்ட் அதிகாரி மறுத்தார். மேலும், வேலை வாய்ப்பின் போது, தகவல் தொடர்புக்கு ஆங் கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதையும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பின் போது, ஆங்கிலத்தின் அவசியத்தையும் கோர்ட் அதிகாரி வலியுறுத்தினார்.
மனுதாரரின் நோக்கத்துக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் உள்ளவர்களில் 90 சதவீதத்தினருக்கு ஆங்கிலம் தெரியாது, புரியாது என்பதை ஏற்க முடியாது. பெரிதும் மனிதவளம் கொண்ட நாடு இந்தியா. ஏராளமான மாணவர்கள், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புக்கு காத்திருக்கின்றனர்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு ஆங்கில மொழி முக்கியமானதாக இருக்கிறது. நம் நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் உள்நாட்டிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா? எனவே, வெளிநாடுகளிலும் அவர்கள் வேலை வாய்ப்பு தேடுகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆங்கில மொழி கல்வி முக்கியமானதாக அமைகிறது. பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட மொழிகள் சட்டம், இந்தி அதிகாரபூர்வ அலுவல் மொழியாக இருந்தாலும், ஆங்கிலத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், ஆங்கில மொழியை முற்றிலும் அகற்ற வேண்டுமானால், பார்லிமென்டில் சட்டம் கொண்டு வந்து, அதை நிறைவேற்ற முடியும்.
இந்தி மற்றும் பிராந்திய மொழிகளின் வளத்துக்காக மனுதாரர் அளிக்கும் முக்கியத்துவம் பாராட்டத்தக்கது. ஆனால், ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்த மொழிகள் அமைய முடியாது. இவ்வாறு தங்கள் உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
