UPDATED : நவ 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சமீபத்தில் இக்கல்வி நிறுவனத்தின் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. 2007 மற்றும் 2008ல் இங்கு படித்து பட்டம் பெற்ற 2066 மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பட்டம் வழங்கப்பட்டது. மத்திய அரசின் நெசவுத்துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலா இவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் மாணவர்கள் மத்தியில் நல்ல வழக்கங்களை மேம்படுத்தவும், அதன் மூலம் சிறப்பான பணிவாய்ப்பு பெற வேண்டிய தேவையை அவர்கள் உணர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உலகில் நிகழும் பொருளாதார தேக்க நிலை இந்தியாவை பெரிதளவில் பாதிக்கவில்லை என்று கூறிய அவர், மாணவர்கள் எதிர்காலத் தேவைகளுக்கேற்ற திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2006-07ஆம் ஆண்டு முதல் டிசைன் ஸ்பேஸ் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு என்.ஐ.எப்.டி.,யில் துவங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் முதுநிலைப் பிரிவில் டிசைன், மேனேஜ்மென்ட் அண்டு டெக்னாலஜியில் படிப்பு வழங்கும் என்.ஐ.எப்.டி., யின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது.
என்.ஐ.எப்.டி.,யின் 2006ம் ஆண்டு வரைவின்படி இந்தக் கல்வி ஆண்டு முதல் பேஷன் துறையில் ஆராய்ச்சிப் படிப்புகள் தரப்படவுள்ளன. 2008ம் ஆண்டு என்.ஐ.எப்.டி., மேலும் 4 புதிய மையங்களில் செயல்படத் துவங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பேஷன் டெக்னாலஜி படித்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையிலும், என்.ஐ.எப்.டி., தனது மாணவர்களுக்கு நல்ல பணிவாய்ப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007ம் ஆண்டில் மட்டும் இக்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 49 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பப்பட்டதும், நெதர்லாந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் என்.ஐ.எப்.டி.,க்கு வந்து படித்ததும் இந்நிறுவனத்தின் சாதனைகளில் மைல்கல்லாக உள்ளது.
தற்சமயம் என்.ஐ.எப்.டி., வெளிநாட்டு பேஷன் பள்ளிகளுடன் 26 எம்.ஓ.யு.,க்களைக் கொண்டுள்ளது. பல சிகரங்களைத் தொட்ட என்.ஐ.எப்.டி.,யின் பயணம் இன்னமும் தொடர்கிறது.
