கல்வி பெறும் உரிமை மசோதா தாக்கல் செய்ய அரசு தீவிரம்
கல்வி பெறும் உரிமை மசோதா தாக்கல் செய்ய அரசு தீவிரம்
UPDATED : நவ 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பார்லிமெண்டின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே இம்மசோதா கொண்டு வரப்பட்டு, சட்டமாக்குவதற்கு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக ஆரம்பக்கல்வி மற்றும் கல்வியறிவுத் துறை செயலர் ஏ.கே.ராத் இம்மசோதா குறித்துக் கூறியதாவது:
பதினான்கு வயதிற்கு கீழ் உள்ள சிறார்களுக்கு இலவச கல்வி உரிமை மசோதா இவ்வாண்டு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், ஏற்படும் நிதிச் சுமையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். பெற்றோர், தனியார் பள்ளிகளுக்கு, குழந்தைகளுக்கு 14 வயது வரை கட்டாய இலவச கல்வி அளிப்பதை கட்டாயமாக அமல்படுத்த வேண்டிய பொறுப்புகள் இதில் விளக்கப்பட்டு இருக்கும். நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே இம்மசோதா தாக்கல் செய்யப்படும். இதற்கான நிதித்தேவை எவ்வளவாக இருந்தாலும், அதை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும்.
இச்சட்டத்தின் கீழ், மாணவர்களிடம் எந்த பள்ளியும் நன்கொடை கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு நன்கொடை கட்டணம் வசூல் செய்தால், அபராதம் விதிக்கப்படும். இதே போல, மாணவர் சேர்க்கையின் போது, அவர்களை தரம்பிரித்து சேர்ப்பது, அனுமதிக்கப்படாது. முதல் முறையாக தவறு செய்யும் பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரமும், அதற்கு அடுத்த முறை தவறு செய்யும் ஒவ்வொரு முறையும் ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட அமைப்பிடம் இருந்து அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த இடங்களுக்கு, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை அரசேச, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு செலுத்தும். அரசின் மதிப்பீட்டின் படி, இத்திட்டத்தை ஏழு ஆண்டுகள் அமல்படுத்துவதற்கு ரூ.2.28 லட்சம் கோடி நிதி தேவைப்படும்.
இம்மசோதா நிறைவேறி சட்டமானதும், அதை அமல்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு கூடுதலாக 12 ஆயிரம் கோடி தேவைப்படும்.
இந்த நிதியை மத்திய, மாநில அரசுகள் எந்த விகிதத்தில் பகிர்ந்துகொள்வது என்பது பின்னர் முடிவு செய்யப்படும். இதை அமல்படுத்த, ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்து மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
எதாவது ஒரு மாநிலம், நிதி நெருக்கடியின் அடிப்படையில், இதற்காக நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டால், இப்பிரச்னை மத்திய நிதிக்கமிஷனின் ஆய்வுக்கு விடப்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில், கூடுதல் நிதிச் சுமையை மத்திய அரசேச ஏற்கும். ஆனால், நிதி கமிஷன் எடுக்கும் முடிவுக்கு மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும்.
இச்சட்டத்தை கண்காணிப்பதற்கும், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனின் கீழ், மாநில அளவில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன்கள் செசயல்படும். இந்த கமிஷனுக்கு சிவில் கோர்ட்டுக்கு உரிய அதிகாரங்கள் அளிக்கப்படும். சட்டத்தை மீறி எந்த பள்ளியாவது செயல்பட்டால், உடனடியாக அமல்படுத்த வேண்டிய உத்தரவுகளை மாநில கமிஷன் பிறப்பிக்கும்.
இது தவிர, ஒவ்வொரு பள்ளியிலும், குழந்தைகளின் பெற்றோர்கள், அப்பகுதியில் பிரபலமானவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, இச்சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்கும். இதில் கல்வித் தரம், வசதிகள், கல்வி உபகரணங்கள் போன்றவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஒவ்வொரு பள்ளியும், 40 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை பின்பற்ற வேண்டும். கல்வித் தரத்தில் கிராமம், நகர்ப்புறம் என்ற பேதம் களையப்படும்.
இது தவிர, பள்ளிகளின் வேலை நாட்கள், ஆசிரியர்களின் பணி நேரம் போன்றவையும் இச்சட்டத்தில் வரையறுக்கப்படும். குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனைகள் இச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஆசிரியர்கள் தனியாக டியூஷன் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஏ.கே.ராத் கூறினார்.
