மத்திய பல்கலை. காலி இடங்களில் மீண்டும் மாணவர் சேர்க்கை!
மத்திய பல்கலை. காலி இடங்களில் மீண்டும் மாணவர் சேர்க்கை!
UPDATED : நவ 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட காலி இடங்கள் காலியாக இருந்தால், அவற்றை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்றுக் கொள்ள சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அவற்றை பொதுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கான (கிரீமிலேயர்) ஆண்டு வருமான வரம்பு முன்னர் 2.5 லட்சம் ரூபாயாக இருந்தது. இதனால், முதலில் நடந்த மாணவர் சேர்க்கையின் போது, ஏராளமான மாணவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர முடியாமல் போனது. ஆனால், கிரீமிலேயருக்கான ஆண்டு வருமான வரம்பு 2.5 லட்சத்திலிருந்து 4.5 லட்சம் ரூபாயாக அக்டோபரில் உயர்த்தப்பட்டதால், மேலும் பல மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதனால், மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது காலியாக உள்ள 4,800 இடங்களை நிரப்ப மீண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதைச் செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டு காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியும் நிரப்ப முடியவில்லை என்றால், பொதுப் பிரிவு மாணவர்கள் அந்த இடங்களில் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அதனால், காலியிடங்களை நிரப்புவதற்காக மத்திய பல்கலைக்கழங்களில் மீண்டும் ஒரு முறை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
