மாநில சீனியாரிட்டியில் ஆசிரியர் நியமனம்: அரசு இடைக்கால ஏற்பாடு
மாநில சீனியாரிட்டியில் ஆசிரியர் நியமனம்: அரசு இடைக்கால ஏற்பாடு
UPDATED : நவ 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அரசுப் பள்ளிகளில் தற்போது நடைபெறும் இடைநிலை ஆசிரியர் நியமனம், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக அரசு துவக்கப் பள்ளிகளுக்கு தேவையான இடைநிலை ஆசிரியர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில், நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, துவத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்தப் பிரச்னை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை சென்றதன் விளைவாக, மாநில சீனியாரிட்டி அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களுக்காக, பெரும்பான்மை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் சென்னையில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை போராட்டம் நடத்தினர்.
தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன், மாணவர்களுடன் பேசி சமாதானம் செய்ய முயன்றார். எனினும், போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லாமல், ஏராளமான மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்னை தொடர்பாக, தொடக்கக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்ட விளக்க அறிக்கை:
கடந்த 1995ல், மாநில அளவிலான போட்டித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 1996ல் தி.மு.க., அரசு அமைந்தபின், மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்திட உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு வரை மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையிலேயே, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கருதி, சில மாவட்டங்களைச் சேர்ந்த வேலையில்லாத இடைநிலை ஆசிரியர்கள் சிலர், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், அரசின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மாவட்ட சீனியாரிட்டிபடி நியமனம் நடந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், மதுரை ஐகோர்ட் கிளையில் மேல் முறையீடு செய்தனர். அதில், மாநில பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கில், மாநில அளவிலான சீனியாரிட்டிபடி நியமனம் செய்ய வேண்டும் என்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது; இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை. பள்ளிகளில் தற்போது ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருப்பதற்காகவும் இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். எனினும், இவர்களின் நியமனம் சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
