UPDATED : டிச 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சாய்ஸ் பேஸ்ட் கிரெடிட் சிஸ்டம் (சி.பி.சி.எஸ்.) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பள்ளிகளில் தமிழ் பாடத்தையே படிக்காத மாணவர்கள் பகுதி-4 பிரிவின் கீழ் தமிழை ஒரு பாடமாகக் கட்டாயம் கற்க வேண்டும் என்று அரசு தெரிவித்தது. இந்தத் தமிழ் மொழிப் பாடத் தேர்வுகள் ஆறாம் வகுப்பு தரத்தில் இருக்கும் என்றும் வரையறுக்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட தன்னாட்சிக் கல்லூரிகள் அல்லாத மற்ற கல்லூரிகளில் தமிழ் மொழியை வாரத்திற்கு இரண்டு மணி நேரம் கற்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள் வேறுபாடப் பிரிவுகளை எடுத்துப் படிக்கலாம்.
சென்னைப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு டிசம்பர் 3ம் தேதி தமிழ்ப் பாடத் தேர்வு நடைபெற்றது. தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் இத்தேர்வை எழுதவதில் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். கேள்விகளைக்கூடப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சில மாணவர்கள் குறை கூறினார்கள். அதேசமயம் சில கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், பல மாணவர்கள் மிகக் குறுகிய நேரத்திலேயே தேர்வுத் தாளை சுலபமாக எழுதி முடித்து விட்டார்கள் என்றும் கூறுகிறார்கள். அப்ஜெக்டிவ் டைப் முறையில் தேர்வுத்தாள் இருந்தால் நல்லது என்றும் சில மாணவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்தத் தேர்வு குறித்த குறைபாடுகள் கல்லூரி முதல்வர்கள் எழுதினால், மாணவர்களின் நலன் கருதி அதுகுறித்து தேர்வுக் குழுவிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே. முருகேசன் தெரிவித்தார்.
