தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விமலர் மாணவர்களின் கேள்விகளுக்கு அண்ணாதுரை பதில்கள்

கல்விமலர் மாணவர்களின் கேள்விகளுக்கு அண்ணாதுரை பதில்கள்

கல்விமலர் மாணவர்களின் கேள்விகளுக்கு அண்ணாதுரை பதில்கள்


UPDATED : டிச 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்விமலர் இணையதளம் வழியாக ஏராளமான மாணவர்கள் கேள்விகளை அனுப்பியிருந்தனர். இதில் சிறந்த கேள்விகளை கேட்டிருந்த மாணவர்களுடன் அண்ணாதுரை தொடர்பு கொண்டு பேசினார். கல்லூரி மாணவர்களைப் போலவே பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அண்ணாதுரையிடம் விளக்கங்களை கேட்டனர்.
சந்திரயான் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள், அவர் பதவி வகிக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (இஸ்ரோ) பணியில் சேர்வதற்கு உரிய படிப்புகளையும் வழிமுறைகளையும் ஆர்வத்துடன் கேட்டனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாகவும் மாணவர்களின் சந்தேகங்களை பொறுமையாக கேட்ட அண்ணாதுரை அதற்கு பதில் அளித்தார்.
மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிய அண்ணாதுரை,  ஆர்வமுள்ள துறையிலேயே மாணவர்கள் படிப்பை தேர்வு செய்ய வேண்டும். எல்லோரும் தேர்வு செய்கிறார்களே என்று ஒரே மாதிரியான படிப்பை நீங்களும் தேர்வு செய்ய வேண்டியதில்லை. பிடித்ததை படியுங்கள். எந்த படிப்பானாலும் அதில் முதன்மையானவராக வாருங்கள்,  என்றார்.
தினமலர் கல்விமலர் ஏற்பாடு செய்துள்ள இந்த தொலைபேசி கலந்துரையாடல் நிகழ்ச்சி, மாணவர்களின் கேள்விகளுக்கு அண்ணாதுரை அளித்த பதில்கள்.


சந்திரயான்-1 திட்டத்துக்காக எத்தனை ஆண்டுகள் உழைத்தீர்கள்?
- கண்ணாமணிமுத்து, ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை

1991ம் ஆண்டிலிருந்து 2003ம் ஆண்டுவரை சந்திரயான் திட்டம் வேண்டுமா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்றன. 2004ம் ஆண்டிலிருந்து, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சந்திரயான்-1 திட்டப் பணிகள் நடந்தன.

பாதுகாப்புத்துறை அல்லது இஸ்ரோவில் பணிபுரிய ஆர்வமாக இருக்கிறேன். இஸ்ரோவில் வேலைவாய்ப்புக்கு எப்படி தயாராவது?
- கவுதமன், எம்.குமாராசாமி இன்ஜினியரிங் கல்லூரி, கரூர்


இஸ்ரோவில் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து இஸ்ரோ  இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கான நுழைவுத் தேர்வு எழுதி பணியில் சேரலாம். எம்.இ., எம்.டெக்., படித்தபின்னரும் இஸ்ரோவில் சேர விண்ணப்பிக்கலாம்.

2012ம் ஆண்டில் உலகம் அழிந்துவிடும் என்கிறார்களே உண்மையா?
- பிருத்விராஜ், சென்னை கிறிஸ்தவ கல்லூரி, தாம்பரம்
நமது வாழ்நாளுக்குள் இதுபோன்ற எதுவும் நடக்க வாய்ப்பிருப்பதாக எந்த ஆய்வும் குறிப்பிடவில்லை. ஆகவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.


சந்திரனில் இந்தியர் தரை இறங்குவது எப்போது?
- ஸ்ரீபாபா, மாதா இன்ஜினியரிங் கல்லூரி, குன்றத்தூர்
சந்திரயான்-1 மற்றும் சந்திரயான் -2 திட்டங்களுக்குப் பின்னர், 2020ம் ஆண்டில் இந்திய விண்வெளி வீரர்கள் நிலவுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.


பேலோட் என்கிறார்களே அது பற்றி கூறுங்கள்?
- கார்த்திகேயன், சாய் மெட்ரிக் மேனிலைப் பள்ளி, மடிப்பாக்கம்
பஸ்சில் பயணம் செய்யும் பயணிதான் பஸ்சுக்கு பேலோட். அதே போல் விண்கலத்தில் பல்வேறு பணிகளை செய்வதற்காக பொருத்தப்பட்டுள்ள கருவிகள்தான் பேலோட் என்கிறோம்.


சர்வதேச விண்வெளி மையம் போல், எதிர்காலத்தில் நாமே சொந்தமாக விண்வெளி மையம் அமைக்க திட்டம் உள்ளதா? தற்போதுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் நாமும் பங்குதாரராக ஆகி நம் விண்வெளி வீரர்களை அங்கு அனுப்பி சோதனை செய்ய வாய்ப்புள்ளதா?
- சவும்யா, கிருஷ்ணசாமி நினைவு மேனிலைப்பள்ளி, கடலூர்.


சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டம் ஏதும் இந்தியாவிடம் இல்லை. தற்போதுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பங்கேற்கவும் உத்தேசம் இல்லை. நிலவில் விண்வெளி ஆய்வு மையத்தை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகளை இந்தியா பரிசீலித்து வருகிறது. 2020ம் ஆண்டுக்குப் பின்னர் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.


வெளிநாடுகள் மாற்று எரிபொருளை பயன்படுத்துகின்றன. ஹைட்ரஜன் எரிபொருளை நமது நாடு எப்போது பயன்படுத்தும்?
- சையத்யூசுப், முகமது சதக் ஏ.ஜே., இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை

இஸ்ரோ அமைப்பும் டாடா நிறுவனமும் இணைந்து இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இரண்டாண்டுகளில் இந்த ஆய்வில் நல்ல முடிவுகள் கிடைக்கலாம். நானோ காரை உருவாக்கிய டாடா நிறுவனம் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனத்தை உருவாக்க ஆர்வத்துடன் உள்ளது. அமெரிக்காவைப் போல மாற்று எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் இங்கும் வரும்.


ஏவியானிக்ஸ் துறையில் ஆர்வமாக உள்ளேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
- ராம்பிரீத்தி, வேலம்மாள் இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லூரி, மதுரை


ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., போன்ற கல்வி நிறுவனங்களில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் முதுநிலை படிப்பை படிக்கலாம். குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் ஏவியானிக்ஸ்/ஏரோஸ்பேஸ் படிக்கலாம். இந்த பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களுக்கு இஸ்ரோ, எச்.ஏ.எல்.,  நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பாதுகாப்பு துறையிலும் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


சந்திரயான்-1 வெற்றி அடைந்துவிட்ட பின்னர், சந்திரயான்-2ன் தேவை என்ன?
- கோபிநாத், ஜெயா இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை

பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து தேர்வான பின்னர், எப்படி நான்காமாண்டு செல்வீர்களோ அதுபோல், சந்திரயான்-1க்கான பணிகள் நிறைவடைந்த பின், அடுத்த கட்ட பணிகளுக்காக சந்திரயான்-2 தேவைப்படுகிறது. சந்திரயான்-1 நிலவின் தரைப்பகுதியை படம்பிடித்து அங்கு ஹீலியம்-3 உள்ளிட்ட வளங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்கிறது. சந்திரயான்-2 ரோவர் தரை இறங்கி அதை உறுதி செய்யும். அடுத்த கட்டமாக அங்கிருந்து அந்த பொருளை எடுத்து வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.


அறிவியல் பாடப்பிரிவில் படிக்க மாணவர்களிடம் ஆர்வமில்லையே ஏன்?
- கீர்த்திகா ராணி, லேடிடோக் கல்லூரி, மதுரை
உடனடி வேலை வாய்ப்பு கருதி, இன்ஜினியரிங் மருத்துவம் போன்ற படிப்புகளில் மாணவர்கள் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள். அறிவியல் பாடப்பிரிவில் ஆர்வமிக்க மாணவர்களை ஈர்ப்பதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நீங்கள் எந்த பாடப்பிரிவை எடுத்துப்படித்தாலும் அதில் முதல்வராக இருங்கள்.


இஸ்ரோவில் சேர ஆர்வமாக உள்ளேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
- பிரசாந்த், சப்அர்பன் மேனிலைப் பள்ளி, கோவை
ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு எழுதி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (ஐ.ஐ.எஸ்.டி.,) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம். இங்கு சேரும் மாணவர்களின் படிப்புக்கான முழுச்செலவையும் அரசே பார்த்துக் கொள்கிறது. இங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
பி.இ., போன்ற இளநிலை பட்டம் முடித்த மாணவர்கள் தேர்வு எழுதி இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெறலாம்.


சந்திரயான்-1ல் நேனோ டெக்னாலஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதா? கிரையோஜெனிக் இன்ஜின் உருவாக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டதா?
- கார்த்திக் ராஜா, பாரத்நிகேதன் இன்ஜினியரிங் கல்லூரி, ஆண்டிபட்டி

சந்திரயான்-1ல் நேனோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. சந்திரயான்-2ல் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
கிரையோஜெனிக் இன்ஜின் உருவாக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது. அடுத்தமுறை இந்த இன்ஜின் பயன்படுத்தப்படும்.


இஸ்ரோவில் சேர்வதற்கு என்ன தகுதியை எதிர்பார்க்கிறார்கள்.
- மகேஸ்வரன், ஸ்ரீசவுடேஸ்வரி வித்யாலயா, கோவை

பிளஸ்-2 முடித்தவுடன் பி.எஸ்சி., இயற்பியில் படித்து அதே துறையில் எம்.எஸ்சி., படித்துவிட்டு இஸ்ரோவில் சேர விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் படித்த மாணவர்களும் இஸ்ரோவில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்பு நிச்சயம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us