சென்னைப் பல்கலையில் 13 படிப்புகளில் சேர்வதில் ஆர்வமில்லை!
சென்னைப் பல்கலையில் 13 படிப்புகளில் சேர்வதில் ஆர்வமில்லை!
UPDATED : ஜன 19, 2009 12:00 AM
ADDED : ஜன 19, 2009 05:47 PM
கணக்குத் தணிக்கை அறிக்கை மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.
2003-2004ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக இந்த முதுலைப் படிப்புகளில் 8 சதவீதத்திலிருந்து 49 சதவீதம் வரை மட்டுமே மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 68 துறைகளில் 80 முதுநிலைப் பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 59 துறைகளுக்கான புள்ளி விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 13 துறைகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. சில துறைகளில் கடந்த சில ஆண்டுகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.
எம்.எஸ்சி., நியூக்கிளியர் பிசிக்ஸ், எம்.எஸ்சி., எலெக்ட்ரானிக்ஸ் சயின்ஸ், எம்.ஏ., அரசியல் விஞ்ஞானம், பொது மேலாண்மை, புராதன வரலாறு, மானுடவியல், தொல்லியல், சைவசித்தாந்தம், ஜெயினாலஜி, சம்ஸ்கிருதம், தத்துவம், கன்னடம், சம்ஸ்கிருதம், டிபன்ஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடீஸ், எகனாமெட்ரிக்ஸ், பிரெஞ்ச் ஆகிய படிப்புகளில் சேர்வதில் மாணவர்களிடம் ஆர்வம் இல்லாத நிலை உள்ளது தெரிய வந்துள்ளது. மத சித்தாந்தம் தொடர்பான படிப்புகளில் தனிப்பட்ட ஆர்வம் காரணமாகவே மாணவர்கள் சேருகிறார்கள். எனவே, இந்தப் படிப்புகளில் ஒரு சில மாணவர்களே சேரும் நிலை உள்ளது என்று பல்கலைக்கழக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
2003-2004லிருந்து 2006-07லிருந்து எம்.ஏ., சைவசித்தாந்தப் படிப்பில் ஒரு மாணவர்கூட சேரவில்லை. இப்படிப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 10. கடந்த ஆண்டில் எம்.ஏ., தத்துவப் படிப்பில் 20 இடங்கள் இருந்தும் அதில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்துறையில் படித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே 21தான். அறிவியல் பாடப்பிரிவுகளுடன் ஒப்பிடும்போது கலைப் பாடப்பிரிவுகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
தமிழ்நாட்டிலேயே சென்னை பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் எம்.ஏ., மானுடவியல் பாடப்பிரிவு உள்ளது. ஆனால், இப்பாடப்பிரிவில் சேருவதில் பல மாணவர்கலிடம் ஆர்வம் இல்லாமல் உள்ளது. ஆனால் இந்தப் படிப்பு படித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு இருப்பதையும் சில பேராசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் இந்தப் பாடப்பிரிவில் பிஎச்.டி., படிக்க மாணவர்களிடம் அதிக ஆர்வம் உள்ளது. இந்தப் படிப்பைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., மானுடவியல் படிப்பைக் கொண்டு வருவது குறித்து பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருகிறது.
