ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழில் குளறுபடி
ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழில் குளறுபடி
UPDATED : ஜன 20, 2009 12:00 AM
ADDED : ஜன 20, 2009 12:48 PM
இதனால், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாமல் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு முடித்த மாணவர்களுக்கு ஜனவரி 18ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மதிப்பெண் பட்டியலைப் பெற்ற கையோடு, அவற்றைப் பதிவு செய்வதற்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஜனவரி 19ம் தேதி மாணவர்கள் குவிந்தனர்.
இடைநிலை ஆசிரியர் நியமனத்தில், மாநில அளவிலான பதிவு மூப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பதிவு செய்வதில் ஒரு நாளில் தாமதம் ஏற்பட்டாலும் பல ஆயிரம் பேருக்குப் பின் தள்ளப்பட நேரிடும்.
இதை மனதில்கொண்டு, ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் படிப்பைப் பதிவு செய்தனர். இதற்கிடையே, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் அதிகளவு எழுத்துப் பிழைகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பெயர், ‘இனிஷியல்’, பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் எழுத்துப் பிழைகளைப் பார்த்த பல மாணவர்கள், தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் குவிந்தனர். மாணவர்கள் தெரிவித்த பிழைகளை உடனுக்குடன் சரிசெய்ய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘தேர்வுத்துறையின் கவனக்குறைவால், எங்களால் உடனடியாக பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எழுத்துப் பிழை நிறைந்த சான்றிதழ்களை அப்படியே பதிவு செய்தால் பின்னாளில் ஏதாவது பிரச்னை வரும் என்பதால் இங்கே வந்துவிட்டோம்’ என்றனர்.
தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் தரும் தகவலின் அடிப்படையில் தான் மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரிக்கிறோம். மாணவர்கள் சரியான தகவலைக் கொடுத்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது’ என்றனர்.
இந்தத் தேர்வு மட்டுமில்லாமல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு சான்றிதழ்களில் ஏற்படும் இதுபோன்ற குளறுபடிகளைச் சரிசெய்ய மாணவர்கள் வருவது வழக்கமாக நடக்கிறது. மாணவர்கள் சரியான தகவல்களை முன்கூட்டியே கொடுத்திருந்தாலும், அதை மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்யும்போது சில தவறு ஏற்படுகின்றன.
இதனால், இந்தப் பிரச்னை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்தபடி இருக்கிறது. இதை தீர்ப்பதற்கு தேர்வுத்துறை சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
