UPDATED : ஜன 26, 2009 12:00 AM
ADDED : ஜன 26, 2009 11:33 AM
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் அண்ணாதுரை நூற்றாண்டு பிறந்த நாள் விழா, அண்ணா பல்கலைக்கழக 30ம் ஆண்டு விழா, எம்.ஐ.டி., வைர விழா ஆகிய விழாக்கள் நடைபெற்றன. இதையொட்டி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேர்ற ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் துணைவேந்தர்களுக்கு நினைவுப் பரிசையும் பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கி பேசியதாவது:
கடந்த 2002ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவர்களுக்கு சமூக மாற்றத்தில் தொழில்நுட்பம் குறித்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். இதில் ஒன்பதாம் விரிவுரையை முடித்து விட்டு அலுவலகத்திற்கு வந்த போது, எனது அலுவலகத்திலும் தொடர்ந்து தொலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த அழைப்பை எடுத்தபோது, எதிர்முனையில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
நாங்கள் அனைவரும், நீங்கள்தான் நாட்டின் புதிய ஜனாதிபதியாக வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானித்துள்ளோம். சரி என்ற ஒரு வார்த்தையை மட்டும் கூற வேண்டும் என்றார்.
சிறிது அவகாசம் கேட்டேன். நண்பர்களுடன் ஆலோசித்து விட்டு, என்னை அனைத்துக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறிய 15வது நிமிடத்தில் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் நாட்டின் 11வது ஜனாதிபதியை அளித்தது. இவ்வாறு கலாம் பேசினார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் வா.செ.குழந்தைசாமி, மு. ஆனந்தகிருஷ்ணன், ஆர்.எம். வாசகம், ஏ. கலாநிதி, டி. விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பி. சிவலிங்கத்திற்கு விழாவில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய துணைவேந்தர் மன்னர் ஜவஹர் விழாவில் கலந்து கொண்டார்.
