15 நாள் தான் அண்டர் ஏஜ் எம்.பி.பி.எஸ்., கனவு போச்சு!
15 நாள் தான் அண்டர் ஏஜ் எம்.பி.பி.எஸ்., கனவு போச்சு!
UPDATED : ஜூலை 27, 2009 12:00 AM
ADDED : ஜூலை 27, 2009 01:16 PM
நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் அங்காம் சாய் ராம்; பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்தில் அதிக மதிப்பெண் பெற்று, ஒன்பதாவது ரேங்க் பெற்றிருந்தார். எப்படியும் எம்.பி.பி.எஸ்., படிக்க அட்மிஷன் கிடைத்து விடும் என்று நம்பியிருந்தார்.
பதினேழு வயது பூர்த்தி அடைந்திருந்தால் தான் எம்.பி.பி.எஸ்., படிக்க முடியும். ஆனால், சாய்ராமுக்கு, 17 வயது பூர்த்தியாக 15 நாள் குறைவாக இருந்தது. இதற்காக, மாநில மேனிலைக்கல்வித் துறை செயலர் லட்சுமி பார்த்தசாரதியிடம் முறையிட்டு, விலக்கு அளிக்கும் வகையில் தனி கெசட் உத்தரவையும் பெற்றார் சாய்ராம் தந்தை அங்காம் அஞ்சுரா.
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங்கில் உட்கார்ந்தபோது, எதிர்பார்த்தபடி அட்மிஷன் கிடைத்தது. ஐதராபாத்தில் உள்ள பிரபல என்.டி.ஆர்., சுகாதார அறிவியல் பல்கலைக் கழகத்தில் சாய்ராமுக்கு இடம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. பல்கலைக் கழகத்துக்கு சென்று தன் சான்றிதழ்களை தந்தபோது தான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
சான்றிதழ்களை பார்த்த பல்கலைக் கழக அதிகாரிகள், சாய்ராம் தந்தை எதிர்பார்த்தபடியே, அண்டர் ஏஜ் என்று காரணம் கூறினர். இதற்கு நாங்கள் மாநில அரசின் தனி ஜி.ஓ., வாங்கியிருக்கிறோம் என்று கூறினர். ஆனால், பல்கலைக் கழக அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவே இல் லை. மத்திய அரசின், இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவுபடிஅண்டர் ஏஜ் என்றால் அட்மிஷன் தர முடியாது என்று மறுத்து விட்டனர்.
பல்கலைக் கழக துணைவேந்தர் கிருஷ்ணம் ராஜுவை சந்திக்க சாய்ராம், அவர் தந்தை முயன்றனர். ஆனால், அவர் சந்திக்க அனுமதி தரவில்லை. என் மகனை டாக்டராக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தேன். ரேங்க் வாங்கியிருப்பதால் அது நடக்கும் என்று நினைத் தேன். ஆனால், இப்போது அது பொய்த்து விட்டது. இனி வாழ் நாளில் அவன் டாக்டராக முடியும் என்று தோன்றவில்லை என்று தெரிவித்தார் தந்தை.
இது குறித்து மாநில மேனிலைக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவ கவுன்சில் என்ன சொல்கிறதோ அதை அட்மிஷனில் பின்பற்ற பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவு உள்ளது. ஜி.ஓ., போட்டாலும், நாங்கள் வேண்டுகோள் தான் விட முடியும் என்று அரசு அதிகாரிகளும் கைவிரித்துவிட்டனர்.
