UPDATED : ஜூலை 27, 2009 12:00 AM
ADDED : ஜூலை 27, 2009 01:43 PM
மும்பையைச் சேர்ந்த பெண் விகிதா சோனி; சி.ஏ., இறுதி ஆண்டு தேர்வு எழுதியிருந்தார். எப்போதும் சிறப்பாக படித்து அதிக மதிப்பெண் எடுக்கும் இவர், இந்த தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்தார். தகவல் உரிமை சட்டப்படி மனு செய்ய, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை அணுகினார். தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வுக்கு சேவை செய்யும் இந்நிறுவனத்தின் உதவியுடன் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் பயிற்சி நிறுவனத்திடம் விண்ணப்பித்தார். தகவல் உரிமை சட்டப்படி (ஆர்.டி.ஐ.,) அவர் செய்த மனுவில், சி.ஏ., இறுதி ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதை சோதித்துப் பார்க்க என் விடைத்தாளின் நகல் வேண்டும் என்று கேட்டிருந்தார். இதை பயிற்சி நிறுவனம் உடனே நிராகரித்து விட்டது. மீண்டும் அப்பீல் செய்தார். அதையும் பயிற்சி நிறுவனம் நிராகரித்துவிட்டது. எங்கள் பயிற்சி நிறுவன விதிகளின்படி, விடைத்தாள்களின் நகல் தர அனுமதியில்லை என்று விளக்கம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, டில்லியில் உள்ள மத்திய தகவல் கமிஷனில் சோனி மனு செய்தார். இதை விசாரித்த கமிஷன், அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. மனுதாரர் தான் எழுதிய தேர்வின் மதிப்பெண் மீதான சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவே, விடைத்தாள் நகல் கேட்கிறார். அவர் தன் விடைத்தாளின் நகல் தான் கேட்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உள் ளது. அதனால், பயிற்சி நிறுவனம் தந்து தான் ஆக வேண்டும் என்று கமிஷனர் அன்சாரி அதிரடியாக அறிவித்தார். விடைத்தாள் நகலை பெற தகவல் உரிமை சட்டத்தில் வழி உள்ளது.
அதற்கான மனுவை மாணவர்கள் செய்யலாம் என்பது மட்டுமின்றி, இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் உள்ள சி.ஏ., படிக்கும் மாணவர்களுக்கு தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது என்று மும்பை சார்ட்டர்டு அக்கவுன்ட்ன்ட் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.
