UPDATED : ஜூலை 28, 2009 12:00 AM
ADDED : ஜூலை 28, 2009 03:29 PM
தமிழகத்தில் உள்ள 422 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 676 இடங்கள் உள்ளன. இதில் ஜூலை 27ம் தேதி நிலவரப்படி 41,623 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 64,430 இடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆகஸ்ட் 10ம் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் முடியும்போது 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என்று பொறியியல் மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலர் வி. ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்காக 357 பொறியியல் கல்லூரிகளில் இருந்த 85,560 இடங்களில் 7,327 இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட 53,898 மாணவர்களில் 41,624 மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கிற்கு வந்தனர். 12, 105 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்து பாடப்பிரிவைத் தேர்வு செய்யாத மாணவர்களின் எண்ணிக்கை 167. கவுன்சலிங்கிற்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இதேபோல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுசூழல் பொறியியல், மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி ஆகிய பாடப்பிரிவுகளில் இதுவரை ஒரு மாணவர் கூட சேரவில்லை.
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் உள்ள 22,587 இடங்களில் 10,838 இடங்கள் இதுவரை பூர்த்தியாகியுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 21,322 இடங்களில் 5,931 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் மொத்தம் 15 ஆயிரத்து 250 இடங்கள் இருந்தும், இதுவரை 3 ஆயிரத்து 305 பேர் (21 சதவீதம்) மட்டுமே சேர்ந்துள்ளனர். இதில் மாணவர்கள் ஆயிரத்து 253, மாணவிகள் 2 ஆயிரத்து 52.
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 15,093 இடங்களில் 5,537 இடங்களும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 14,540 இடங்களில் 7,226 இடங்களும் சிவில் இன்ஜினியரிங்கில் 7,799 இடங்களில் 3,491 இடங்களும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்கில் 1,673 இடங்களில் 850 இடங்களும் பூர்த்தியாகியுள்ளன.
