ரூ.5 கட்டணத்தில் எம்.ஏ., படிப்பு: மாணவர்கள் சேராததால் விரக்தி!
ரூ.5 கட்டணத்தில் எம்.ஏ., படிப்பு: மாணவர்கள் சேராததால் விரக்தி!
UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM
ADDED : ஜூலை 29, 2009 12:04 PM
மதுரை மாவட்டம், மேலூர் அரசு கலைக் கல்லூரியில், பி.ஏ., பி.காம்., மற்றும் பி.எஸ்சி., இளங்கலை பட்டப்படிப்புகள் இரண்டு ஷிப்ட் முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரே ஒரு முதுகலை பட்டப்படிப்பு எம்.ஏ., (வரலாறு) மட்டுமே கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது.
பி.எஸ்சி., மற்றும் பி.காம்.,களுக்கு இருக்கும் போட்டி எம்.ஏ., வுக்கு இருப்பது இல்லை. 20 சீட் கொண்ட இப் பிரிவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக முழு அளவில் மாணவர்கள் சேரவே இல்லை. இந்தாண்டுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டது.
இன்று வரை மொத்தம் ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. இதனால், விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்பில் சேரும் எஸ்.டி., எஸ்.சி., மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே கல்லூரிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு 705 ரூபாய் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்க நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
கூவி கூவி அழைத்தும் இதுவரை ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. இத்தனைக்கும், மேலூர் கல்லூரியின் வரலாற்று துறையில் உள்ள ஒன்பது பேராசிரியர்களில் ஏழு பேர் முனைவர் பட்டம் பெற்ற மிகச் சிறந்த ஆசிரியர்கள்.
போதிய ஆசிரியர்கள் இருந்தும், கல்லூரிக் கட்டணம் குறைவாக இருந்தும், மாணவர்கள் கலைக் கல்லூரியை விரும்பாமல் தொழிற் சார்ந்த படிப்பை படிக்க விரும்புவதையே இது காட்டுகிறது.
