UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM
ADDED : ஜூலை 29, 2009 12:23 PM
சென்னை மாவட்டத் தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடந்துவரும் முதல்பருவ இடைநிலைத் தேர்வில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வினாத்தாள் வழங்காததால், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் தாமதமாக தேர்வுகள் நடக்கின்றன. காலை, 9 மணிக்கு வரவேண்டிய வினாத்தாள், பிற்பகல் 1 மணி வரை கிடைக்காததால், காலையில் நடக்க வேண்டிய தேர்வுகள் அனைத்தும் பிற்பகலில் நடந்தன. பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுக்கு முன்னதாக, பருவ இடைநிலைத் தேர்வுகள் (மிட்டர்ம்) நடத்தப்படும். சென்னை மாவட்ட அளவில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பருவ இடைநிலைத் தேர்வுகள் துவங்கின. இந்தத் தேர்வுகள், மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பொதுவான தேர்வாக நடத் தப்படுகிறது. இதற்கான வினாத்தாள்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் வினியோகிக்கப்பட வேண்டும். அதன்படி, வினாத்தாள்களை அச்சடித்து, மாவட்டத்தில் உள்ள வினாத்தாள் கட்டுக் காப்பகங்களுக்கு (கஸ்டோடியன் பாய்ன்ட்) வினியோகம் செய்யும் பொறுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வினாத்தாள் கட்டுக் காப்பகங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் வினியோகிக்கப்பட்டதும், அந்தப் பகுதியைச் சார்ந்த பள்ளிகளின் ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மையத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிக்குத் தேவையான வினாத்தாள்களை பெற்றுவந்து, தேர்வை நடத்த வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக வினாத்தாள் கட்டுக் காப்பகங்களுக்கே உரிய நேரத்தில் வினாத்தாள்கள் வந்துசேரவில்லை. இதனால், பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வினாத்தாள்கள் சென்றடையவில்லை. முதல் நாளான நேற்று முன்தினமே (ஜூலை 27) இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. 9 மணிக்கு தேர்வை துவக்குவதற்கு ஆசிரியர்கள் தயாராக இருந்தபோதும், வினாத்தாள் வராததால் 10 மணி, 11 மணி என்று ஒவ்வொரு பகுதியிலும் கால தாமதமாக தேர்வைத் துவக்கியுள்ளனர். இரண்டாம் நாளான நேற்று 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு காலையில் கணிதம், ஆங்கில பாட தேர்வுகளும், பிளஸ் 2 மாணவர்களுக்கு இயற்பியல், ஆங்கிலம் தேர்வுகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று (ஜூலை 28) பகல் 1 மணி வரை, வினாத்தாள் வரவில்லை. இதனால், காலையில் நடத்த வேண்டிய அனைத்து தேர்வுகளும், பிற்பகல் 2 மணிக்குப் பிறகு நடந்தன. தேர்வுகள் தாமதமாக துவங்கியதால், பள்ளியை, குறிப்பிட்ட நேரத்தில் மூட முடியாமல், 5 மணி வரை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஆசிரியர்கள் புலம்பினர்.
