UPDATED : ஆக 05, 2009 12:00 AM
ADDED : ஆக 05, 2009 12:40 PM
நாடு முழுவதும் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதற்கான மசோதாவுக்கு மாநிலங்களவை ஜூலை 20ம் தேதி ஒப்புதல் அளித்தது.
வரலாற்று சிறப்பு மிக்க மத்திய அரசின் இந்த புதிய சட்டம், இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்க உதவும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபில் மக்களவையில் விவாதங்களுக்கு பதில் அளித்துப் பேசும்போது குறிப்பிட்டார்.
'தொடக்கக் கல்வியில் மாநில அரசுகளின் முயற்சிகளில் தலையிடும் வகையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. முடிந்தவரை தொடக்கக் கல்வி, அந்தந்தக் குழந்தைகளின் தாய் மொழியிலேயே இருப்பது நல்லது. இந்தச் சட்டத்தின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்பது உரிமையாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகைகளிலும் குழந்தைகள் சிறந்து விளங்கும் வகையில் பாடத்திட்டம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும். பள்ளிக் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை இந்த மசோதா தடை செய்கிறது.
ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25 சதவீத இடங்கள் உடல் ஊனமுற்றோர் உள்பட நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் 50 சதவீத இடங்கள் சிறுபான்மையினரைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்' என்றார் அவர்.
தொடக்கப்பள்ளி நிலையில் 100 மாணவர்கள் சேர்ந்தால் 12 மாணவர்களே பட்டப் படிப்பு நிலைக்கு வருகிறார்கள். ஐரோப்பாவில் இந்த சதவீதம் 50லிருந்து 70 சதவீதம் வரை உள்ளது. உலகளவில் சராசரியாக 27 சதவீதம் உள்ளது. இந்தியாவில் 2012ல் 15 சதவீதமாகவும் 2020ல் 30லிருந்து 35 சதவீதமாகவும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கபில் சிபல் தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குறைந்தபட்ச கட்டமைப்பு வசதிகளை மூன்றாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், அந்தப் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாகும் சூழ்நிலை ஏற்படும். அதேபோல் உரிய வகையில் ஆசிரியர் நியமனங்களும் செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
