UPDATED : ஆக 12, 2009 12:00 AM
ADDED : ஆக 12, 2009 01:05 PM
எந்த பல்கலைக்கழகமோ, நிகர்நிலைப் பல்கலைக்கழகமோ தொலைநிலைக் கல்வி மூலம் எம்.பில்., பிஎச்.டி., படிப்பை நடத்தக் கூடாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது.
பல்வேறு பல்கலைக்கழகங்களில் பிஎச்.டி., படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் சரியாக இல்லை என்று பேராசிரியர் முங்கேகர் குழு கமிட்டி சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கிடையே வேறுபட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை முறைப்படுத்தும் வகையில் இந்த விதிமுறைகள் பொதுவாக தயாரிக்கப்பட்டுள்ளன.
நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்களை பிஎச்.டி., படிப்புக்குச் சேர்க்க வேண்டும். அட்மிஷனுக்குப் பிறகு ஒரு செமஸ்டர் காலத்திற்கு ஆய்வுமுறைகள் குறித்து படிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் குறிப்பிட்ட காலவரையறையில் பிஎச்.டி., ஆய்வேட்டைத் தயாரிக்க வேண்டும். துறையில் உள்ளவர்களிடம் முன்வைத்து அவர்களது கருத்தறிய வேண்டும். ஒரு ஆய்வேட்டை இரண்டு நிபுணர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் ஒருவர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டு மதிப்பீடு செய்வது குறித்து பல்கலைக்கழகமே முடிவு செய்து கொள்ளலாம்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி பிஎச்.டி., படிப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் நெட் அல்லது ஸ்லெட் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படுவார்கள்.
ஒரு மேற்பார்வையாளர் எட்டு பிஎச்.டி., மாணவர்கள் மற்றும் 5 எம்.பில்., மாணவர்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக்கூடாது. அனைத்துக் கல்வி நிறுவனங்களும் பிஎச்.டி., ஆய்வேட்டின் பிரதியை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
