ஒரு வாரத்தில் சமச்சீர் கல்வித் திட்ட மாதிரிப் பாடத்திட்டம்!
ஒரு வாரத்தில் சமச்சீர் கல்வித் திட்ட மாதிரிப் பாடத்திட்டம்!
UPDATED : அக் 06, 2009 12:00 AM
ADDED : அக் 06, 2009 01:55 PM
இத்தகவலை அனைவருக்கும் கல்வித் திட்ட கவுரவ ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்தார். சமச்சீர் கல்வி முறையில் மெட்ரிக் பள்ளிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போதுள்ள வெவ்வேறு கல்வி முறைகளை இணைத்து, சமச்சீர் கல்வி முறையை அறிமுகம் செய்யும் முயற்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. இதற்கென அமைக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் நிபுணர் குழுவினர் பாடத்திட்ட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சமச்சீர் கல்வி முறையின் முக்கிய ஆலோசகராக செயல்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கவுரவ ஆலோசகர் விஜயகுமார் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நான்கு கல்வி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள நல்ல விஷயங்களை ஒன்று சேர்த்து, ஒரு பொது கல்வி முறை வகுப்பதே சமச்சீர் கல்வி திட்டத்தின் லட்சியம்.
இதனால், பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் வராது. புதிய கல்வி முறையால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கோ, பள்ளிக்கோ எந்தவித பாதிப்பும் வராது. சமச்சீர் கல்வி திட்டத்தின் மாதிரி பாடத்திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகி விடும்.
இப்பாடத் திட்டம், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்து சேகரிக்கப்படும்.
ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அரசு மட்டும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை. தமிழக பள்ளிக் கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும் என்பதே லட்சியம்.
இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சமச்சீர் கல்வி பற்றிய அனைவரின் சந்தேகங்களும், குழப்பங்களும் தீர்த்து வைக்கப்படும். செயல்வழிக் கற்றல் (ஏ.பி.எல்.,) மற்றும் படைப்பாற்றல் கல்வி(ஏ.எல்.எம்.,) முறைகளின் சிறப்பு பற்றி அறிந்த தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள், அக்கல்வி முறைகளை தங்களது பள்ளிகளிலும் அறிமுகம் செய்ய ஆர்வமுடன் இருப்பதாக கூறுகின்றனர்.
தனியார் பள்ளிகளிலும் இக்கல்வித் திட்டங்களை அறிமுகம் செய்வதில் எந்த தடையும் இல்லை. பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்களை பயன்படுத்தி, பயிற்சி அளிப்பதிலும் எந்த பிரச்னையும் இல்லை. எந்த கல்வி முறையாக இருந்தாலும், எந்த பள்ளியாக இருந்தாலும் குழந்தைகளின் கல்வி நலன்தான் முக்கியம். ஒரு நல்ல திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும். குழந்தைகளை படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்ற, ஒவ்வொரு ஆசிரியரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, விஜயகுமார் கூறினார்.
