சத்துணவு சமைப்பது ஓரிடம்; சாப்பிடும் குழந்தைகள் வேறிடம்!
சத்துணவு சமைப்பது ஓரிடம்; சாப்பிடும் குழந்தைகள் வேறிடம்!
UPDATED : அக் 06, 2009 12:00 AM
ADDED : அக் 06, 2009 02:46 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் அருகிலுள்ள சோமநாதபுரத்தில் கடந்த 2006-07ம் ஆண்டில் அரசு துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது.
தற்போது, 55 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆரம்பத்தில் நன்கொடையாளரின் வீட்டில் செயல்பட்ட இந்த பள்ளி, தற்போது எஸ்.எஸ்.ஏ., சார்பில் புதிய கட்டடத்தில் செயல்படுகிறது. சோமநாதபுரம் பள்ளிக்கு சத்துணவு கூடம் இல்லாததால், இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மற்றொரு பள்ளியில் சத்துணவு தயாரித்து சோமநாதபுரம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பள்ளி ஆசிரியர், சத்துணவு பணியாளர் ஆகியோர் கூறியதாவது:
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாணவர்களின் படிப்பறிவை ஏற்படுத்தவும், சுமையை குறைக்கவும் இங்கு பள்ளி துவக்கப்பட்டது. சத்துணவு கூடம் எதுவும் அமைக்கப்படாததால் பள்ளி துவக்கப்பட்ட சில மாதங்களுக்கு இங்கிருந்த கவுன்சிலர் தன்னுடைய சொந்த செலவில், மெஸ்சில் இருந்து மாணவர்களுக்கு சாப்பாடு வரவழைத்து வழங்கினார்.
அதையடுத்து அருகிலுள்ள பள்ளியிலிருந்து சாப்பாடு வழங்க கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தினமும், இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காளியாபுரம் எல்.பி.பி.எம்., அரசு பள்ளியில் இங்குள்ள மாணவர்களுக்கும் சேர்த்து சாப்பாடு சமைக்கப்படுகிறது. பின், அங்கிருந்து மாணவர்களுக்கு தேவையான சாப்பாடு, சாம்பார், முட்டை, சுண்டல் போன்ற உணவுப்பொருட்கள் அடங்கிய பாத்திரத்தை சத்துணவு பணியாளர் சுமந்து வந்து வழங்க வேண்டியதுள்ளது.
மழை காலங்களில், நனையாமல் உணவை பாதுகாப்பாக கொண்டு வர தாமதமாவதால், ஒவ்வொரு முறையும் அவதிப்பட வேண்டும். பலமுறை கோரிக்கை விடுத்ததையடுத்து, 1.1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில புதிதாக சத்துணவு கூடம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டுமானபணி முடிவடைந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் திறக்கப்படவில்லை. சத்துணவு பணியாளரை நியமித்து, மாணவர்களுக்கு சமைப்பதற்காக அரிசி, பருப்பை பள்ளிக்கு ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், மாணவர்களுக்கு எவ்வித பிரச்னையுமின்றி சத்துணவு வழங்க முடியும் என்றனர்.
