கல்விக்கடன் தருவதில் வங்கிகள் இழுத்தடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் புகார்
கல்விக்கடன் தருவதில் வங்கிகள் இழுத்தடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் புகார்
UPDATED : அக் 08, 2009 12:00 AM
ADDED : அக் 08, 2009 03:19 PM
அ நிறம் | அளவு
கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்புவது வழக்கம். இந்த மாதத்துக்கான கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாநாத் தலைமையில் நடந்தது.
கோவை எம்.பி., நடராஜன், எம்.எல்.ஏ.,க்கள் வேலுசாமி, வேலுமணி, சின்னராஜ், தாமோதரன், பிரேமா, எம்.என்.கந்தசாமி மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியவுடன், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்களது புகார்களை அடுக்கத் துவங்கினர். குறிப்பாக, கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் மாணவர்களை தேவையின்றி இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினர்;
தங்களது
பரிந்துரைகளை யாரும் மதிப்பதில்லை என்றும் குமுறினர். இதுவரையிலும் கோவை மாவட்டத்தில் வங்கிகள் வாரியாக, மாணவ, மாணவியருக்குத் தரப்பட்டுள்ள கல்விக்கடன் குறித்த விபரங்களைத் தர வேண்டுமென்று எம்.எல்.ஏ.,க்கள் கேட்டனர். அதுபற்றிய விபரம் தற்போது இல்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.எந்த வங்கியில் இதுபோன்ற குறைபாடுகள் உள்ளது என்று தெரிவித்தால், அந்த வங்கி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று கலெக்டர் பதிலளித்தார். அடுத்த முறை வங்கியாளர்கள் கூட்டம் நடத்தும்போது, வங்கிகள் வாரியாக தரப்பட்ட கல்விக்கடன் குறித்த அனைத்து விபரங்களுடன் வருமாறு கூறப்படும் என்று மக்கள் பிரதிநிதிகளுக்கு கலெக்டர் உமாநாத் உறுதி கூறினார்.
பல்லடம் எம்.எல்.ஏ., வேலுசாமி கூறுகையில், கல்விக்கடன் எளிதாகக் கொடுப்பதாக அரசு விளம்பரப்படுத்துகிறது. ஆனால், வங்கிகளைத் தேடிச் செல்லும் மாணவ, மாணவியரை அலைக்கழிப்பது தொடர்ந்து வருகிறது என்றார்.
