விளையாட்டு வீரர் ஒதுக்கீடு: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை
விளையாட்டு வீரர் ஒதுக்கீடு: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை
UPDATED : அக் 09, 2009 12:00 AM
ADDED : அக் 09, 2009 12:30 PM
அ நிறம் | அளவு
சென்னையைச் சேர்ந்த மாணவி பிரவீணா தேவி தாக்கல் செய்த மனுவில், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும். நான்கு ஆண்டுகளில், பல் வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மருத்துவப் படிப்பில் என்னை சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி பிறப்பித்த உத்தரவு:
ஒரு ஆண்டில் அதிக சாதனை படைத்த விளையாட்டு மட்டுமே பரிசீலிக்கப்படும் என்பதை ஏற்க முடியாது. இதை ரத்து செய்கிறேன். மருத்துவப் படிப்பில், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், மூன்று இடங்களுக்கு நான்கு பேர் போட்டி போடுகின்றனர். இவர்களில், மூன்று பேரை தேர்ந்தெடுக்க, ஒரு தேர்வு முறையை அரசு வகுக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொண்டு, வெற்றி பெற்றதை பரிசீலிக்க வேண்டும் என்பது தான் நியாயமானது, இரண்டு பேர் ஒரே மதிப்பெண்களை பெற்றிருந்தால், அப்போது அவர்களின் கல்வி திறனை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு போட்டியிலும் பங்கு பெற்று சாதனை படைத்ததற்காக வழங்கப்படும் மதிப்பெண்களை வைத்து, சிறப்பானவர்களை தேர்ந்தெடுப்பது தான் நியாயமாக இருக்கும். இவ்வாறு, நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தேர்வு குழுவும், திருநெல்வேலியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
ஒரு ஆண்டில் நடத்தப்பட்ட போட்டிகளின் சாதனைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால், அதிக எண்ணிக்கையில் போட்டிகள் நடக்கும்
குறிப்பிட்ட விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் தான், மற்றவர்களைவிட முன்னணியில் இருப்பர்.
குறைவான எண்ணிக்கையில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பாதிக்கப்படுவர். இதனால், குறிப்பிட்ட விளையாட்டில் மட்டுமே மாணவர்கள் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் சூழ்நிலை உருவாகும். விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டின் நோக்கமே பாதிக்கப்படும். தற்போதைய கட்டத்தில், மீண்டும் தேர்வு நடத்த இயலாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.முருகேசன், ஜெய்சந்திரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
விளக்க குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளபடி, விளையாட்டு துறைக்கு மூன்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் வகுப்பில் சேர்ந்துள்ளனர். கார்த்திக் என்பவரின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரை வழக்கிலும் சேர்க்கவில்லை. அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அப்பீல் மனு மீதான உத்தரவை பொறுத்து, மாணவர்களின் தேர்வு அமையும். இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
