50 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., விரைவில் அனுமதி?
50 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., விரைவில் அனுமதி?
UPDATED : அக் 10, 2009 12:00 AM
ADDED : அக் 10, 2009 02:47 PM
உரிய வசதிகளைக் கொண்ட 50 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்து, மேல் நடவடிக்கைகளுக்காக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் அனுமதிக்கு அனுப்பியுள்ளது.
சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் போதிய வசதிகள் இல்லாத நிலையிலும், அந்த வசதிகளைச் செய்யும் பணிகளை அந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன. 15 நாட்களுக்குப் பிறகு நடக்கும் மானியக் குழுவின் கூட்டத்தில் மேலும் சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான பட்டியல் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்துள்ள நிபுணர் குழு பரிசீலனை செய்து அறிக்கை அளிக்கும் வரை, பரிந்துரை எதையும் அளிக்க வேண்டாம் என மத்திய மனித வள அமைச்சகம் ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய மனித வள அமைச்சகத்தின் நிபுணர் குழு இந்த மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உரிய வசதிகள் இல்லாமல் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படி இக்குழு பரிந்துரை செய்யும் என்றும் தெரிகிறது. அவ்வாறு உள்ள சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பழையபடி திரும்பவும் கல்லூரிகளாகவே செயல்படச் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
மொத்தம் உள்ள 130 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 60 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
