பழைய வினாத்தாள் பொக்கிஷம்; அழகிய எழுத்துக்கு அதிக மதிப்பெண்!
பழைய வினாத்தாள் பொக்கிஷம்; அழகிய எழுத்துக்கு அதிக மதிப்பெண்!
UPDATED : அக் 11, 2008 12:00 AM
ADDED : அக் 11, 2009 08:38 AM
தினமலர், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை., கோவை எஸ்.எஸ்.வி.எம்., வோல்டு பள்ளி இணைந்து நடத்திய ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் ஸ்ரீ சாய்ராம் மஹாலில் நடந்தது.
பத்தாம் வகுப்பு ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சி காலை 9.00 மணிக்கு துவங்கியது. காலை 7.00 மணி முதல் மாணவ, மாணவிகள் நிகழ்ச்சிக்கு வரத் துவங்கினர். மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, ஆனைகட்டி பகுதிகளில் இருந்தும் 2000 மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.இவர்களுடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் வந்திருந்து ஆசிரியர்கள் கூறிய ஆலோசனைகளைக் கேட்டனர்.
மாணவிகளுக்கு தமிழ், ஆங்கில 10 வகுப்பு வினாத்தாள், புளூ பிரிண்ட் அடங்கிய புத்தகம், இறையன்பு எழுதிய ஜெயித்துக்காட்டுவோம், மாணவிகள் உடல் நலம் பற்றிய மாணவிகளுக்கு மட்டும் என்ற 3 புத்தகமும் வழங்கப்பட்டன.
மாணவர்களின் உடல் நலன் குறித்த உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் உட்பட 3 புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டன.இதில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு தயார் செய்தல், தேர்வு எழுதும் போது செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது ஆகியவை குறித்து ஆசிரிய, ஆசிரியைகள் பாட வாரியாக பேசினர்.
தமிழ்- ஜெயலட்சுமி, அரசு மேல்நிலைப்பள்ளி நாயக்கன்பாளையம்:
தமிழ்த்தேர்வில் எழுத்துப்பிழை இல்லாமல், எழுத்துக்கள் அழகாகவும், தெளிவாகவும், தேவையான இடைவெளி விட்டும் எழுத வேண்டும். விடைத்தாளில் அடித்தல் திருத்தல் இருக்கக்கூடாது; மனப்பாடப் பகுதிளை அடிக்கடி எழுதி பயிற்சி செய்து சந்திப்பிழை இல்லாமல் எழுதி பழக வேண்டும்.வீடு, பள்ளிகளில் கிடைக்கும் நேரங்களில் அடிக்கடி எழுதிப் பார்த்து சுய மதிப்பீடு, சக மாணவர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கொடுத்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். சராசரியாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட இந்த பயிற்சியால் நல்ல மதிப்பெண் பெறலாம்.வினாத்தாளில் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் விடை எழுதாமல் இருக்கக் கூடாது. தமிழ் இரண்டாம் தாளில் ஒருமை, பன்மை வேறுபாடுகள், துணைப்பாட பகுதிகளில் உப தலைப்புகளுக்கு அடிக்கோடு போட வேண்டும்.பொதுத்தேர்வுக்கு முன் நடக்கும் பயிற்சி தேர்வுகளில் செய்யும் சிறு சிறு தவறுகள், உங்கள் ஆசிரியர் கூறும் குறிப்புகளை கவனித்து சரி செய்து கொண்டால் அதிக மதிப்பெண் பெறலாம். ஒரே தவறுகளை மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆங்கிலம் - அன்பரசி, அரசு மேல்நிலைப்பள்ளி சிறுமுகை:
தேர்வு எழுதும் முன் வினாத்தாள் படிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தில் பொறுமையாக, முழுமையாக வினாத்தாளை படிக்க வேண்டும்.நன்றாக தெரிந்த வினாக்களை தேர்வு செய்து, வினாத்தாள் வரிசை எண் படி எழுத வேண்டும். வினாத்தாளில் உள்ள எண்ணை கவனித்து அதை விடைத்தாளில் சரியாக எழுத வேண்டும். முதல் தாளில் கட்டுரை பாராவாகவும், உப தலைப்புகள் கொடுத்தும் எழுதினால் அதற்கு முழு மதிப்பெண் கிடைக்கும்.பாராவாக பிரித்தல், உப தலைப்பிடுதலுக்கு தனித்தனி மதிப்பெண்கள் உண்டு. கட்டுரை, செய்யுள் ஆகியவற்றை அடிக்கடி எழுதி பார்த்துக் கொண்டால் நன்றாக மனதில் பதிந்து விடும். இரண்டாவது தாளில் கடிதப் பகுதியில் அனுப்புநர், பெறுநர், பொருள், தங்கள் உண்மையுள்ள, கவர் முகவரி ஆகியற்றை மட்டும் எழுதினாலே 5 மதிப்பெண் கிடைக்கும்.இரண்டாம் தாளில் இலக்கணம் அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் மதிப்பெண் குறைய வாய்ப்பு உண்டு. இதற்கு முதல் தாள்களை நன்றாக படித்துக் கொண்டால் நல்ல மதிப்பெண் பெறலாம்.பழைய பொதுத்தேர்வு வினாத்தாள்களை சேகரித்து அதைக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.
கணிதம் - உஷாராணி, தம்பு மேல்நிலைப்பள்ளி வீரபாண்டி பிரிவு:
மன இறுக்கம், தேவையில்லாத குழப்பங்களை தவிர்த்து, நம்பிக்கையுடனும் திட்டமிட்டும் தேர்வு எழுதச் செல்ல வேண்டும். கணக்கு எழுதும் போது விடைகள் அனைத்தையும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும். சூத்திரக் கணக்குகளில் கண்டிப்பாக சூத்திரம் எழுதி கணக்குப் போட வேண்டும். விடை தவறாக இருந்தாலும் சூத்திரத்திற்கு பாதி மதிப்பெண் கிடைக்கும். வினாத்தாள் வரிசைப்படி விடைகளை எழுத வேண்டும். ரப் ஒர்க்குகளுக்கு தனி பக்கத்தை ஒதுக்கி அதிலும் தெளிவாக கணக்குகளை செய்ய வேண்டும். கிராப், ஜாமன்ட்ரி கணக்குகளை நன்றாக பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.கடைசி நேரம் வரை தேர்வு எழுதாமல், 15 நிமிடத்திற்கு முன்பாகவே தேர்வு எழுதி முடித்து விட்டு விடைத்தாளில் வினா எண், விடைகளை சரி பார்க்க வேண்டும்.மாதிரி வினாத்தாள்கள், முன்னாள் பொதுத்தேர்வு வினாத்தாள்களை கொண்டு சுயமதிப்பீடு செய்து கொண்டால் கணக்கில் 100 மதிப்பெண் வாங்கலாம். சராசரி மாணவர்கள் கூட இவ்வாறு பயிற்சி செய்தால் 20 முதல் 30 மதிப்பெண்கள் அதிகம் பெறலாம்.
அறிவியல் - மாடசாமி, தம்பு மேல்நிலைப்பள்ளி:
அறிவியல் பாடத்தில் இயற்பியல் பிரிவில் கணக்குகளை எழுதும் போது தவறாது அலகுகள் குறிப்பிட்டு விடை எழுத வேண்டும். அறிவியல் பாடத்தை பொருத்த வரை படவிளக்கம் மிக அவசியம். படவிளக்கம் இல்லாத விடைகளுக்கு அதிக மதிப்பெண்கள் குறையும். விடைகளை பாயிண்ட்களாக பிரித்து புரியும் படி எழுத வேண்டும். 2,7,13 ஆகிய பாடங்களில் இருந்து 5 மதிப்பெண் வினாக்கள் பொதுத்தேர்வுக்கு வராது. ஒன்று, இரண்டு மதிப்பெண் வினாக்கள் இந்த பாடங்களில் இருந்து அதிகம் கேட்கப்படும். பெரிய வினாக்கள் எழுதும் போது அதிக நேரத்தை செலவழிக்கக்கூடாது.எட்டே நிமிடத்தில் அந்த வினாக்களை எழுதி முடிக்க வேண்டும். பாடங்கள் மனதில் நன்றாக பதிய அதிகாலை நேரத்தில் எழுந்து படிக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுக்க எளிமையான வழி வருடத்திற்கு 3 முறை நடக்கும் பொதுத்தேர்வுகள் வினாத்தாள்களை சேகரித்து, அதனை கொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.
சமூக அறிவியல் - மணி,அரசு மேல்நிலைப்பள்ளி காரமடை:
பொதுத்தேர்வில் கேள்விகள் அனைத்தும் பாட பயிற்சி வினாக்களில் இருந்து தான் கேட்கப்படுகிறது. பாடங்களை திரும்ப திரும்ப படிப்பதன் மூலம் ஒன்று, இரண்டு மதிப்பெண் விடைகளை சுலபமாக எழுதலாம். அடித்தல்கள், இல்லாமல் தெளிவான கையெழுத்துடன் ஒரு பக்கத்திற்கு 20 வரிகளுக்கு மிகாமல் எழுதினால் விடைத்தாள் பார்க்கவே அழகாக இருக்கும். விரிவான விடை எழுதும் வினாக்களுக்கு பாரா அமைத்து, உபதலைப்புகள் கொடுத்தும் எழுத வேண்டும். முக்கியமான வார்த்தைகளுக்கு மட்டும் அடிக்கோடிடலாம். வரைபடங்களில் இடங்களை நன்றாக பார்த்து, குறிக்க பயிற்சி செய்து கொண்டால் நல்ல மதிப்பெண் பெறலாம். வரைபடம் வரைந்து குறிப்பதற்கும் பழகி கொள்ள வேண்டும். காலக்கோடு வரைதலில் நிகழ்வினை வருடத்தின் வரிசையில் எழுத வேண்டும். அளவுகள் 5,10 ஆண்டுகளாக குறிக்கலாம். தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாத பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.விடைத்தாளை சரி பார்க்கும் போது விடைக்கான வினா எண் குறித்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பயிற்சியும், முயற்சியும் இருந்தால் அனைவரும் நல்ல மதிப்பெண் வாங்கலாம்.
