கின்னஸ் சாதனைக்காக பிரபலங்களிடம் ஆட்டோகிராப் பெறும் ஓய்வு பெற்ற ஆசிரியர்
கின்னஸ் சாதனைக்காக பிரபலங்களிடம் ஆட்டோகிராப் பெறும் ஓய்வு பெற்ற ஆசிரியர்
UPDATED : அக் 12, 2009 12:00 AM
ADDED : அக் 12, 2009 11:32 AM
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் வரதராஜ பெருமாள் (70). ஓய்வு பெற்ற ஆசிரியர். 1957ல், தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் பேசிய நெடுஞ்செழியனிடம் முதன்முறையாக ஆட்டோ கிராப் வாங்கினார்.
அன்று முதல், பிரபலங்களை தேடி சென்று ஆட்டோ கிராப் பெறுவதை பழக்கமாக்கி கொண்டார். கல்கி ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தி, சிற்பி ஸ்ரீசீனிவாசன், ஓவியர் கோபுலு, லதா மங்கேஷ்கர், வீணை பாலச்சந்தர், கிதார் மேதை ரவிசங்கர், தற்போது ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் வரை ஆட்டோ கிராப் பெற்றுள்ளார். இவருக்கு ஆட்டோகிராப் போடாத பிரபலங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அவர்களின் போட்டோவில் ஆட்டோகிராப் பெற்றுள்ளார்.
உலகளவில் புகழ் பெற்று விளங்கிய ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்ளின், ஜாக்கிசான், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், ஹால்டரின், தென் ஆப்ரிக்காவில் முதன் முதலில் இதய மாற்று ஆபரேஷன் செய்த டாக்டர் கிருஸ்டின் பெர்னான்ட், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பில்கேட்ஸ், எலிசபெத் டெய்லர், உலக அழகி டயானா, கிரிக்கெட், ஒலிம்பிக் வீரர்கள் என, உள்ளூர் முதல் உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களிடம் ஆட்டோகிராப் பெற்றுள்ளார்.
பிரபலங்களின் முகவரிக்கு கடிதம் எழுதி, படத்துடன் கையெழுத்திட்ட ஆட்டோ கிராப் கொடுங்கள் என கேட்டு வாங்குகிறார்.
வரதராஜ பெருமாள் கூறுகையில், 15 வயதில் ஏற்பட்ட இந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது. இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்துள்ளேன். மூன்றாயிரம் பிரபலங்களின் ஆட்டோகிராப் வைத்துள்ளேன்.
மாணவர்களுக்கு பிரபலங்கள் பற்றி அறிவதற்காக பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சி நடத்துகிறேன். கடந்த மாதம் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளேன் என்றார்.
