UPDATED : அக் 13, 2009 12:00 AM
ADDED : அக் 13, 2009 04:46 PM
அ நிறம் | அளவு
யோகா ஆய்வு கருத்தரங்கு, பாரதியார் பல்கலை உடற்கல்வித் துறை மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் யோகா நேச்ரோபதி சார்பில் பாரதியார் பல்கலையில் நடந்தது.
கருத்தரங்கை துவக்கி வைத்து, சென்னை விளையாட்டு, உடற்கல்வி பல்கலை துணைவேந்தர் வைத்தியநாதன் பேசியதாவது:
யோகா மூலமாக, உடல் எளிதில் நெகிழக்கூடிய தன்மையை அடைகிறது. தற்போதுள்ள இயந்திரதனமான வாழ்க்கையில், யோகா ஒளியேற்றும் விளக்காக உள்ளது. மத்திய பிரதேசம், குவாலியரிலுள்ள விளையாட்டு பல்கலை மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகிறது.
மாநில அளவில் முதல் விளையாட்டு பல்கலையாக சென்னையில் கடந்த 2005 ல் துவங்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலையில் யோகாவுக்கென தனித்துறை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
வெற்றி, தோல்வி கருதாமல் போட்டிகளில் பங்கேற்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். உடற்பயிற்சி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. வயதான பின் டாக்டரின் ஆலோசனை பெற்று வாழ்வதை விட, யோகா மற்றும் உடற்பயிற்சி மூலமாக நலமாக வாழ முடியும். இவ்வாறு, வைத்தியநாதன் பேசினார்.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:
யோகா என்பது தியானம். தற்போதுள்ள வாழ்க்கை சூழ்நிலையில் சோர்வு, நோய்களை அகற்றும் சக்தியாக யோகா திகழ்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்களில் யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்பட் டுள்ளது. மனம் நலம் பெற, கோபம் தவிர்க்க, சமுதாய வளர்ச்சி பெற யோகா உதவுகிறது. உடல் நலம், மனநலத்துக்கு நல்ல உடற்பயிற்சியாக திகழ்கிறது. இவ்வாறு, சாமிநாதன் பேசினார்.
காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில், ஒவ்வொருவரும் உடலை பேணி பாதுகாத்து, நலமுடன் வாழ யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.
முன்னதாக கருத்தரங்குக்கு, பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனர் முருகவேல் வரவேற்றார். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் யோகா இயக்குனர் அறிவழகன், கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரி உடற்கல்வித்துறை டீன் புஷ்பராஜன் முன்னிலை வகித்தனர். சென்னை விளையாட்டு-உடற்கல்வி பல்கலை யோகத் துறை தலைவர் இளங்கோவன் நன்றிகூறினார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல கல்லூரி உடற் கல்வித்துறை பேராசிரியர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.
