புதிய மத்திய பல்கலை.களுக்கு பொது நுழைவுத் தேர்வு !
புதிய மத்திய பல்கலை.களுக்கு பொது நுழைவுத் தேர்வு !
UPDATED : அக் 14, 2009 12:00 AM
ADDED : அக் 14, 2009 02:57 PM
அ நிறம் | அளவு
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.,களைப் போன்று புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். அடுத்த கட்டமாக ஏற்கெனவே இருந்து வரும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்த நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைச் சந்தித்துப் பேசிய கபில்சிபல், மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலம் மாணவர்களின் சிரமங்கள் தவிர்க்கப்படும் என்று குறிப்பிட்டார்.மத்திய பல்கலைக்கழகங்கள் முழுத் தன்னாட்சியுடன் இயங்க அனுமதிக்கப்படும். ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் என்னை எஸ்.எம்.எஸ்., மூலம் தொடர்பு கொள்ளலாம். நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
புதிய மத்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக உருவாக வேண்டும் என்றே அரசு விரும்புகிறது. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்களை நியமிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்கள் இணைந்து பட்டங்களை வழங்கும் முறை, ஒரு பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கான மதிப்பெண்களை அடுத்த பல்கலைக்கழகத்தில் ஏற்றுக் கொண்டு அங்கு பட்டம் வழங்குவது போன்றவற்றுக்கான சாத்தியங்கள் குறித்தும் துணைவேந்தர்கள் ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வேலைவாய்ப்புக் கேற்ற புதிய படிப்புகளைத் தொடங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கபில்சிபல் வலியுறுத்தினார்.
