படித்த பல்கலை.யில் மன்மோகன் சிங்கிற்கு கவுரவ டாக்டர் பட்டம்!
படித்த பல்கலை.யில் மன்மோகன் சிங்கிற்கு கவுரவ டாக்டர் பட்டம்!
UPDATED : நவ 04, 2009 12:00 AM
ADDED : நவ 04, 2009 01:00 PM
மன்மோகன் சிங் படித்த பல்கலைக்கழகமே 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1952ம் ஆண்டில் பி.ஏ., பட்டத்தையும் 1954ல் எம்.ஏ., பட்டத்தையும் பெற்றார் மன்மோகன் சிங். 32 வயதில் அந்தப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் ஆர்.சி. சோப்தி சட்டத்திற்கான கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் நிகழ்ச்சியில் உடன் இருந்தார்.
படித்த பல்கலைக்கழகமே கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது மகிழ்ச்சியளிக்கக்கூடியது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட மன்மோகன் சிங், தனக்குப் பாடம் நடத்திய பேராசிரியர்களையும் உடன் படித்த மாணவர்களையும் தனது பேச்சில் நினைவகூர்ந்தார்.
இன்றைய கால கட்டத்தில் மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி கிடைப்பதில்லை. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற அளவுக்கே மாணவர்களைத் தயார் செய்கின்றன. சர்வதேச கல்வித்தரத்துடன் ஒப்பிடும்போது நமது மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதுபோன்ற காரணங்களால் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் திறமையாந ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 12 சதவீத மாணவர்களே உயர்கல்வி படிக்கும் நிலை உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் 70 சதவீதம் பேரும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 20 சதவீதம் பேரும் உயர்கல்வி பெறுகின்றனர். இதனுடன் ஒப்பிடுகையில் உயர்கல்வி பெறுவதில் இந்திய மாணவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
