மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்ககளை நியமிக்க தற்காலிக ஏற்பாடு
மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்ககளை நியமிக்க தற்காலிக ஏற்பாடு
UPDATED : நவ 20, 2009 12:00 AM
ADDED : நவ 20, 2009 08:26 AM
கடந்த கல்வி ஆண்டில் (2008 - 09) 724 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் 473 இடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை பட்டியல் வழங்கவில்லை. எனவே இப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
கடந்த ஆண்டின் நிலுவையாக உள்ள இப்பணியிடங்கள் மற்றும் இந்த ஆண்டின் 731 பணியிடங்கள் என 1204 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பட்டியலை அனுப்பி வைக்கும்படி இயக்குனரகம் கேட்டது.
தற்போது அரசால் புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அருந்ததியினர் வகுப்பையும் சேர்த்து இனச் சுழற்சி முறையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் தயார் செய்ய கால அவகாசம் தேவை. இது உடனே முடியக் கூடிய காரியம் இல்லை. இந்நிலையில் ஆசிரியர்கள் இல்லாமல் பாடங்களை முடிக்க பள்ளிகள் சிரமப்படும். மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடும் பாதிக்கப்படும்.
எனவே வரும் மாதங்களுக்கு அதாவது 2010 பிப்ரவரி வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக முதுகலை பட்டதாரிகளை பயிற்றுனர்களாக நியமித்துக் கொள்ளலாம். அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே இதனை வேலை வாய்ப்பு அலுவலக பட்டியல் பெறாமலேயே நியமிக்கலாம். இவர்கள் பி.எட்., படித்தவராகவோ அல்லது பெறாதவர்களாகவோ இருக்கலாம். இவர்களுக்கு மாதம் 2500 ரூபாய் சம்பளம். அதனை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வழங்கலாம். இவர்கள் 2010 பிப்ரவரி கடைசி நாளில் விடுவிக்கப்படுவர்.
நிரந்தரமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 2010 பிப்ரவரி 28ம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்தால், அந்த தேதியிலேயே தலைமை ஆசிரியரால் நியமிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
