போலீஸ் நிலையத்தில் பள்ளிக்குழந்தைகள்: பயத்தைப் போக்க புது திட்டம்
போலீஸ் நிலையத்தில் பள்ளிக்குழந்தைகள்: பயத்தைப் போக்க புது திட்டம்
UPDATED : நவ 20, 2009 12:00 AM
ADDED : நவ 20, 2009 08:47 AM
உலக குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலையங்களை அறி முகப்படுத்தி, போலீசார் செயல் படும் விதத்தை தெரிவிக்கும் வகையில், அவர்கள் போலீஸ் நிலையத்தை பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது.
சென்னையில் உள்ள 84 போலீஸ் நிலையங்கள், 27 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் இந்நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ஒரு தமிழ் வழிக் கல்வி மற்றும் ஒரு ஆங்கில வழிக் கல்வி மாணவர்கள் தலா 10 பேர் அழைக்கப்பட்டனர். சென்னை நகரில் உள்ள போலீஸ் நிலையங்களை மொத்தம் 4,000 மாணவர்கள் பார்வையிட்டனர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
போலீஸ் நிலையங்களுக்கு வந்த மாணவர்களை, போலீசார் மலர் கொடுத்து வரவேற்றனர். அவர்களுக்கு இனிப்பு, காபி, டீ உள்ளிட்டவை வழங்கப்பட்டது. சில போலீஸ் நிலையங்களில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், ஜியாமெட்ரி பாக்ஸ், டிக்ஷனரி ஆகியவையும் வழங்கப்பட்டன. ஒரு சில போலீஸ் நிலையங்களில் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
பின் போலீஸ் நிலையத் திற்கு வழக்கமாக எந்த மாதிரியான வழக்குகள் வருகின்றன; அவற்றை எப்படி கையாள்கிறோம் என்பது குறித்து, மாணவர்களுக்கு போலீசார் வகுப்பெடுத்தனர். பின் போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கி, லத்தி உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. மாணவர்கள் உண்மை, நேர்மையாகவும், பொது நல நோக்குடனும் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரையும் வழங்கப்பட்டது.
மாணவிகளுக்கு பெண் கொடுமை சட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், பாலியல் தொந்தரவு இருந்தால் பெற்றோர் மற்றும் போலீசாரிடம் புகார் செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன.
விருகம்பாக்கம் மாநகராட்சி பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி விமலா கூறுகையில், போலீஸ் நிலையம் என்றாலே பயமாக இருந்தது. பள்ளிக்கு வந்த பிறகு தான் போலீஸ் நிலையம் செல்ல இருப்பதை தெரிவித்தனர். இங்கு வந்ததும் மலர் கொடுத்து வரவேற்றபோது மகிழ்ச்சியாக இருந்தது. போலீசார் நண்பர்கள் என எடுத்துரைத்தனர் என்றார்.
இதன் தொடர்ச்சியாக, வரும் 23, 24ம் தேதிகளில் போலீஸ் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்களிடையே போட்டி நடத்தப்பட்டு, சில மாணவர் கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப் படுவோர், வரும் 25ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டு, மாடர்ன் கன்ட்ரோல் ரூம் உள்ளிட்ட வசதிகள் காண் பிக்கப்படுவதுடன், அங்குள்ள போலீசார் செயல்படும் விதம் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.
