தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?


UPDATED : நவ 24, 2009 12:00 AM

ADDED : நவ 24, 2009 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2009 12:00 AM ADDED : நவ 24, 2009 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதன் சாதக, பாதகங்கள் குறித்து கல்வியாளர்களும் பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.


வரவேற்கப்படும் திட்டம்: சமச்சீர் கல்வித் திட்டத்தில், தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தொடக்கக் கல்வியை அனைவரும், தாய்மொழியிலேயே கற்பதற்கு உறுதி செய்ய வேண்டும். தொடக்க கல்வியானது, குழந்தைகளின் எண்ணம், விருப்பத்தை நிறைவேற்றக் கூடியதாகவும், சுயபடைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையிலும், செயல்வழிக்கற்றல் முறையிலும் அமைய வேண்டும்.

ஆசிரியரை மையமாகக் கொண்டு செயல்படும் கல்விமுறையை மாற்றி, ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, மாணவர்களை மையமாகக் கொண்ட படைப்பாற்றல் கல்விமுறை உருவாக்க வேண்டும். மனப்பாட முறை இல்லாமல், புரிந்து செயலாற்றக் கூடிய கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிகளில் உடல், மன ரீதியாக தண்டனை வழங்குவது தடுக்க வேண்டும்.

மாணவனை வரிசைப்படுத்துவதற்கே, தற்போதைய தேர்வு முறை அமைந்துள்ளது. இந்நிலை மாறி, தேர்வுகள் ஒவ்வொரு மாணவரும் எந்தளவு அறிவு பெற்றுள்ளனர் என்பதை அறியவும், ஆசிரியர் தான் கற்பிக்கும் முறை எந்தளவுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பதை அறியவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

சமூக அறிவியல் பாடங்களுக்கு களப்பணி மற்றும் செயல்முறை கல்விக்கு தனியாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும். உடற்கல்வி, இசை, ஓவியம், கைத்தொழில் போன்ற பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, மாணவர்களிடம் ஏற்படும் முன்னேற்றத்தை அறிந்து, பதிவு செய்ய வேண்டும். பள்ளிக் கல்வியை முடித்து வெளியேறுகிற மாணவர், உயர்கல்வி படிக்க முடியாத சூழ்நிலையில், தொழில் தொடங்க ஏதுவாக, வாழ்க்கைக்கு உகந்த தரமான கல்வியாக பள்ளிக்கல்வி அமைய வேண்டும்.

சமச்சீர் கல்வித் திட்டம், தமிழகத்தில் எதிர்பார்த்த மாற்றத்தையும், மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமா என்றால், நிச்சயமாக நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக, கிராமப்புற மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உயர்த்திக் கொள்ள முடியும்.
- எஸ்.நாடாளுமன்றச் செல்வி, ஆசிரியர், ராமேஸ்வரம்.

சமூகத்தை உயர்த்தும் சமச்சீர் கல்வி!: மாணவர்களுக்கு ஏழு வயது வரை, தாய்மொழி வழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். இவ்வயதில் ஓவியம், இசை, பாட்டு, நடனம் போன்ற மனதிற்கு இனிமை அளிக்கும், பாடத்திட்டத்திற்கு முன்னுரிமை தர வேண்டும். இதனால், மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வர வாய்ப்பு அமையும்.

அறிவியல் பாட வகுப்புகளுக்கு, செயல்முறை விளக்கம் கண்டிப்பாக அமைய வேண்டும். முதல் நாள் பாடங்களை நடத்தி, மறுநாள் செயல்முறை நடத்தினால், மாணவர்களின் ஆர்வம் குறைந்துவிடும். நம் நாட்டின் இன்றைய அறிவியல் வளர்ச்சியையும், பிற நாடுகளின் அறிவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி, மாணவர்களுக்கு அறிவியலின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டுவதாக அமைய வேண்டும்.

சமூக அறிவியலில் நேற்றைய மற்றும் இன்றைய சமூகத்தின் நிலைகளை விளக்கி, நாளை நமது சமூகம் எவ்வாறு உயர்வு பெறுவது என்பதை மாணவர்களிடம் இருந்து பதிலாக பெற்று, அதற்கு மதிப்பெண் வழங்கலாம். புத்தகங்களில் உள்ளதை மனனம் செய்து பதில் எழுதுவதை விட, மாணவர்களின் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தும். இன்றைய சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிபவை தொழில் நிறுவனங்கள். ஆகவே, சமூக அறிவியலில் ஒரு பிரிவாக சுயதொழில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவை உருவாக்கி, மாணவர்களுக்கு கற்றுத்தரலாம்.

வரலாற்று பாடத்திட்டங்களில், மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறைகள், தேசத் தலைவர்கள் பற்றிய தகவல்கள் மட்டும் போதாது. இன்றைய நமது அரசியல் அமைப்புச் சட்டங்கள், அதன் அதிகார வரம்புகள் மற்றும் உயர் அரசியல் பதவிகள், அதன் பொறுப்புகள் - வார்டு கவுன்சிலர் முதல் இந்தியாவின் முதல்  குடிமகன் வரை, விரிவாக மாணவர்களுக்கு விளக்க வேண்டும். நாளை நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க இது உதவி புரியும்.

சமச்சீர் கல்வித்திட்டம் என்பது மொழி, மதம், இனம் கடந்து சுயசிந்தனையோடும், மன வலிமையோடும், எதிர்கால வாழ்வை பொருளாதார ரீதியாக எதிர்கொண்டு, சமூகத்தில் உயர்ந்து வெற்றி பெறுவதாக அமைய வேண்டும்.
- வீ.பழனிக்குமார், சிவகங்கை.


சிறப்பாக அமல்படுத்துங்கள்...: தமிழக கல்வி வரலாற்றில் சமச்சீர் கல்வித் திட்டம், எதிர்காலத்தில் ஒரு புதிய கல்விப் புரட்சியை நிச்சயம் ஏற்படுத்தும். இக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதில் அவசரமின்றி, ஓராண்டு காலம் தகுதி வாய்ந்த கல்வியாளர் மற்றும் கல்வி ஆர்வலர்களை கொண்டு, முழுமையாக ஆராய்ந்து, சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போது ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு அறிமுகமாவது போல், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு வகுப்பிற்காக அறிமுகப்படுத்தலாம். இதனால், குறைகளை சரிசெய்ய, கால அவகாசம் கிடைக்கும் மற்றும் ஐந்து வருடங்களில், 100 சதவீதம் முழுமை பெற்று, வெற்றியும் பெறும்.

தற்போது நடைமுறையில் உள்ள பாடங்களை முழுமையாக நீக்கிவிட்டு, புத்தம் புதியதாக, தற்காலத்திற்கு ஏற்ற வகையில், பாடங்கள் எழுத வேண்டும். தற்போதைய நடைமுறை, மாணவர்களின் சுயசிந்தனை வளராமல் தடுக்கப்படுகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்திற்கான பாடங்களை தயார் செய்யும் போது, மாணவர்கள் சுயமாக சிந்தித்து விடை எழுதும் வகையில், பாடங்களை அமைக்க வேண்டியது அவசியம்.

வரலாறு தெரியாத ஒரு மனிதனுக்கு, நாட்டின் மேல் பற்று ஏற்படாது. ஆறு மற்றும் ஏழாம் வகுப்பில், முழுமையான தமிழக வரலாற்றை இரண்டு பகுதிகளாய் பிரித்து, மாணவர்களை கவரும் விதத்தில் கதை போல படைக்கலாம். எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பில், இந்திய நாட்டு வரலாற்றை இரண்டு பகுதிகளாக்கி, எளிய நடையில் தரலாம். பத்தாம் வகுப்பில், உலக வரலாற்றை சுருக்கமாக எழுதி, பாடமாக்கலாம்.

கம்ப்யூட்டரே இல்லாமல், கற்பிக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. ஆறாம் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் பாடம், கட்டாயமாக்க வேண்டும். அறிவியலை பொறுத்தவரை, ஆறாம் வகுப்பிலிருந்தே எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளை கட்டாயமாக்க வேண்டும். 75 மதிப்பெண் எழுத்து தேர்வும், 25 மதிப்பெண் செய்முறை தேர்விற்கும் வழங்கலாம்.

கல்விச் சுற்றுலா என்ற பெயரில் கேளிக்கை விளையாட்டு நிலையங்களுக்கு அழைத்து செல்வது, வழக்கத்தில் உள்ளது. இதை மாற்றி, பால் பண்ணை, சர்க்கரை ஆலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை, மருந்து - மாத்திரை தொழிற்சாலை, பிஸ்கட் தொழிற்சாலை என, மாணவர்களை அழைத்து சென்று, ஒரு பொருள் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பதை காண்பிக்கலாம். இதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும்.


மாதம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் அனைத்தும், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே மாதிரியாக, குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும். இதற்காக ஒரு குழுவை அமைத்து, வினாத்தாளை மொத்தமாக அச்சிட்டு, அனைத்து பள்ளிகளுக்கும் அரசே வினியோகிக்க வேண்டும்.
- ஆர்.வி.பதி, காஞ்சிபுரம்.

வாழ்வுக்கான கல்வி!: தற்போது, பலவகையான பாடத்திட்டங்களோடும், வித்தியாசமான கட்டுக்கோப்புகளோடும், பள்ளிக் கல்வி உள்ளது. இதை, எல்லாருக்கும் சமமான, தரமாக வழங்கும் நோக்கோடு, பல்வேறு வகைப் பள்ளிகளின் பாடத்திட்டங்களை ஒப்பிட்டு, அவற்றின் அம்சங்களை ஒன்றாகச் சேர்த்து, எல்லா பள்ளிகளிலும், ஒரே வகையான பாடத்திட்டத்தை செயல்படுத்துவது தான் சமச்சீர் கல்வி.


ஆனால், சமத்துவத்துக்கு வழிகோலும் கல்வி, மாணவர்களின் தனித்துவத்தை வளர்க்க உதவ வேண்டும். ஏனென்றால், கல்வியின் அடிப்படை நோக்கம், ஒவ்வொரு மாணவனது உண்மையான, தனிப்பண்பு, ஆற்றலை கொணர்வதே. கணிதமேதை ராமானுஜருக்கு ஆங்கிலம் வராது; பாரதிக்கு கணக்கு வராது. எனவே, அவரவர் ஆற்றலைத் தக்கமுறையில் வளர்க்கக் கல்வி உதவ வேண்டும். ஆனால், சில அடிப்படைகளை அனைவரும் அறிய வேண்டும்.

பள்ளிகளில் சுதந்திரமான சிந்தனைக்கு இடமிருந்தால் தான், இது சாத்தியம். பாடத்திட்டங்களும், பாடப்புத்தகங்களும், மாணவர்களை கட்டுப்படுத்தும் கருவிகளாக இல்லாமல், அவர்களது சிந்தனைகளை விரிவுபடுத்தும், ஆற்றல்களை வெளிக்கொணரும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். பாடத்திட்டம் வேண்டுமானால், பொதுவாக இருக்கலாம்; பாடப் புத்தகங்கள் வேறுபடலாம். ஏனென்றால், புத்தகங்களே கல்வியில் முடிவல்ல. அவைகள் பாட அலகுகளை அறிமுகப்படுத்தும் சாதனங்களே.

மாணவர்களை மையமாகக் கொண்ட செயல் மற்றும் சிந்தனை வழியாக, வாழ்க்கையை நோக்கிய கல்வியாக மாற வேண்டும். அப்போது தான், வாழ்வுக்கான கல்வி, வாழ்க்கை மூலம் கல்வி, வாழ்க்கை முழுவதும் கல்வி என்ற காந்திஜயின் கனவு நனவாகும்.

- முனைவர் கா.செல்லப்பன், ஆங்கில பேராசிரியர், சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us