வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக இருக்கவேண்டும்: பேராசிரியர் கண்ணன்
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக இருக்கவேண்டும்: பேராசிரியர் கண்ணன்
UPDATED : நவ 29, 2009 12:00 AM
ADDED : நவ 29, 2009 10:27 AM
பொள்ளாச்சியில் தினமலர் நாளிதழ் நேற்று நடத்திய ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி பேராசிரியர் கண்ணன் பேசியதாவது:
நுழைவு மற்றும் போட்டித்தேர்வில் திறமை அடிப்படையில் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். பாதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெறலாம். மாணவர்கள் பிளஸ்1 வகுப்பில் சேர பத்தாம் வகுப்பு மதிப்பெண்களே அடிப்படையாக உள்ளது. அப்போதுதான், விரும்பிய கோர்ஸ் எடுத்தும் படிக்க முடியும்.அரசுப்பணி என்பது குதிரைக்கொம்பாக உள்ளது.
அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களிலும் அதிக வேலை வாய்ப்பு உள்ளது. மல்டி நேஷனல் கம்பெனிகளில் வேலை வாய்ப்பு உள்ளது. அங்கு பட்டப்படிப்பில் உள்ள தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி 10ம் வகுப்பு, பிளஸ்2 மதிப்பெண் தகுதியாக கருதப்படுகிறது.மாணவர்கள் அடிப்படையிலேயே திறமைசாலிகளா என மதிப்பெண் அடிப்படையில் உளவியல் ரீதியாக நோட்டமிடுகின்றனர்.
எனவே, எதிர்காலத்தில் சிறந்த இடத்தை அடைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய பங்கு வகிக்கிறது.தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வில் 470 மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குகிறது. பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தால் இலவச கல்லூரி, தொழில்நுட்ப படிப்பை வழங்க ஒருசில பல்கலை.,கள் முன்வருகின்றன. இதுபோன்ற வாய்ப்புக்களை மாணவர்கள் பயன்படுத்தி பெற்றோர்களின் சிரமத்தை குறைக்க வேண்டும்.
சமுதாயத்தில் மற்றவர்களை விட மாணவர்களால் மட்டுமே கட்டாயமாக ஜெயிக்க முடியும். பாரதத்தை போற்றி ஆளும் திறமை மாணவர்களுக்கு மட்டுமே உள்ளது. இன்ஜினியராகவோ, டாக்டராகவோ ஆக வேண்டும் என கனவு காணுங்கள். அப்போதுதான், இலக்கை எட்ட முடியும்.ஒருசில மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை உள்ளது. இதிலிருந்து விடுபட்டு இதுவரை படிக்காவிட்டாலும், இனிமேல் முயற்சிக்க வேண்டும்.
ஒவ்வொருவரின் எண்ணம்தான் செயலை நிர்ணயிக்கிறது. ஒவ்வொருவரும் தங்களை புரிந்தும், தெரிந்தும் வைத்திருந்தால் வாழ்வில் முன்னேறலாம். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக இலக்கை நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு, பேராசிரியர் கண்ணன் பேசினார்.
