டி.வி.ஆர்., நினைவு சிறப்பிதழ் தயாரிப்பில் வென்றவர்கள்
டி.வி.ஆர்., நினைவு சிறப்பிதழ் தயாரிப்பில் வென்றவர்கள்
UPDATED : நவ 29, 2009 12:00 AM
ADDED : நவ 29, 2009 10:29 AM
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவாக, சிறப்பு சிற்றிதழ் தயாரிக்கும் போட்டி, கல்லூரிகளுக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கோவை பதிப்புக்கு உட்பட்ட கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பங்கேற்கும் வகையில் சிற்றிதழ் தயாரிப்புப்போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மொத்தம் 8 பக்கங்களுக்குள், இந்த சிற்றிதழை சிறப்பாகத் தயாரிக்க வேண்டுமென்று விதிமுறைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று, விதவிதமாக சிற்றிதழ் தயாரித்து அசத்தியிருந்தனர்.
இதழ் வடிவமைப்பு, கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, நகைச்சுவை என எல்லா விதத்திலும் சிறப்பாக சிற்றிதழைத் தயாரித்த 3 கல்லூரிகள் இதில் பரிசுக்கு தேர்வு பெற்றன. அச்சாணி என்ற பெயரில் சிறப்பிதழ் தயாரித்த பொள்ளாச்சி என்.ஜி.எம். கலை அறிவியல் கல்லூரிக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த கல்லூரி, முதலிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பரிசை, கோவை அவினாசிலிங்கம் பல்கலை மாணவியர் தட்டிச் சென்றனர். அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கோப்பை வழங்கப்பட்டது. இந்த மாணவியர் தயாரித்த சிற்றிதழின் பெயர் நந்தனப்பறவை. கோவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி மாணவியர் தயாரித்த களஞ்சியம் சிற்றிதழ், ஆறுதல் பரிசைப் பெற்றது. இந்த இதழ் தயாரிப்பு 7500 ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. முதல் முறை போட்டியில் பங்கேற்ற இவர்கள், முதல் முயற்சியிலேயே ஆறுதல் பரிசைப் பெற்று அசத்தியுள்ளனர்.
