UPDATED : டிச 03, 2009 12:00 AM
ADDED : டிச 03, 2009 11:48 AM
தற்போதுள்ள நான்கு விதமான போர்டுகளை ஒருங்கிணைத்து, ஒரே போர்டின் கீழ் சமச்சீரான கல்வியை வழங்கும் வகையில், பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில், "பள்ளிக் கல்விக்கான மாநில பொது வாரியம்&' அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நவம்பர் 30ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள இச்சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளைக் கட்டுப்படுத்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத் திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் மற்றும் ஓரியன்டல் பாடத்திட்டம் என, நான்கு வகையான பாடத்திட்டங்கள் அமலில் இருக்கின்றன. இந்த கல்வி முறையால், கல்வியில் ஏற்றத்தாழ்வு நிலவி வந்தது.
இதையடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்தில், சமமான கல்வியை வழங்கும் வகையில், சமச்சீர் கல்வித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் முதற்கட்டமாக, அடுத்த கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு அமலுக்கு வருகிறது. இந்த வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான பொது பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்த கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கும் பொது பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளன.
இந்நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் வகையில், அவசரச் சட்டத்தை பிறப்பித்து கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உத்தரவிட்டுள்ளார். நான்கு போர்டுகளும் ஒரு போர்டின் கீழ் வருவதால், பொதுவான கல்வி வாரியம் அமைக்கப் பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தலைமையின் கீழ், பள்ளிக் கல்விக்கான மாநில பொது வாரியம் அமைத்து, அவசரச் சட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசரச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீரான கல்வியை தரமாக அளித்து, சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. அதன்படி, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்காக, பல்வேறு குழுக்களை அமைத்து, ஆய்வு செய்யப்பட்டது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்தாது: இந்த குழுக்களின் பரிந்துரைகளை ஏற்று, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதென முடிவெடுத்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு சமச்சீர் கல்வித் திட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இச்சட்டம், தற்போதுள்ள நான்கு விதமான பள்ளிகளை மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருக்கும். இதில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சேர்க்கப்படவில்லை. சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு வரும் கல்வியாண்டில் (2010-2011) பொதுப் பாடத்திட்டம் அமலுக்கு வரும். இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2011-2012ம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வரும்.
பொது வாரியம் அமைப்பு: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்காக, பள்ளிக் கல்விக்கான மாநில பொது வாரியம் அமைத்து உத்தரவிடப்படுகிறது. பள்ளிக் கல்வி இயக்குனர், பொது வாரியத்தின் தலைவராக இருப்பார். பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலர், தேர்வுத் துறை இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், தொடக்க கல்வித் துறை இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவர். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), உறுப்பினர் - செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு, சிறந்த கல்வியாளர்கள் மூன்று பேரை தேர்வு செய்து, உறுப்பினர்களாக நியமிக்கும். மேலும், மெட்ரிக் பள்ளிகள், ஓரியன்டல் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் தரப்பில் இருந்து தலா ஒரு உறுப்பினரை தமிழக அரசு நியமிக்கும். இந்த அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
பொது கல்வி வாரியத்தின் பணிகள்
பள்ளிக் கல்விக்கான பொது வாரியத்தின் பணிகள் குறித்து, அவசரச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது: பொது வாரியத்தின் அலுவலகம், சென்னையில் செயல்படும். வாரியத்தின் தலைவர், கூட்டத்திற்கு தலைமை வகிப்பார். கமிட்டியின் நியமன உறுப்பினர்கள், நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகளுக்கு பதவி வகிப்பர்.
வாரியத்தின் செயல்பாடுகள்:
* சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்துவதை உறுதி செய்வது, பொதுக் கல்வி வாரியத்தின் கடமை. வகுப்பு வாரியாக, பொது பாடத்திட்டம் உருவாக்குதல், பாடப் புத்தகங்கள் ஆகியவை குறித்து, குழுவே நிர்ணயம் செய்ய வேண்டும்.
*
தேர்வு முறைகளை உருவாக்குவது, சான்றிதழ் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிப்பது ஆகிய பணிகளையும், பொதுக் கல்வி வாரியம் மேற்கொள்ளும்.*
அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக யாராவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம். மீண்டும் தவறு செய்தால், அது குறித்த விசாரணை நடந்து, இறுதி தீர்ப்பு வரும் வரை, தினமும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம். இவ்வாறு அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.