UPDATED : டிச 12, 2009 12:00 AM
ADDED : டிச 12, 2009 11:20 AM
தனியார் பள்ளிகளின் பல வகையான கட்டணங்களை முறைப்படுத்தி, வரும் கல்வியாண்டில் நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குழுவின் தலைவர் கோவிந்தராஜன், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.குழு உறுப்பினர்களான பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி, தொடக்க கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் மற்றும் உறுப்பினர் - செயலர் சுந்தர்ராஜன் (கல்வித்துறை கூடுதல் செயலர்) ஆகியோருடன், குழுத் தலைவர் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து தலைவர் கூறும்போது,குழுவின் முதல் கூட்டம், டிசம்பர் 14ல் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் நடைபெறும். கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார். மாவட்ட வாரியாக கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, ஆய்வு செய்தபின், ஏப்ரல் இறுதிக்குள் புதிய கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
