UPDATED : டிச 16, 2009 12:00 AM
ADDED : டிச 16, 2009 04:43 PM
சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு:கடந்த 3ம் தேதி, வேதாரண்யம் அருகில் உள்ள கத்திரிப்புலம் கிராமத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்ததில், ஒன்பது மாணவ, மாணவியர் பலியாயினர். ஒரு ஆசிரியையும் இறந்தார்; 12 குழந்தைகள் காயமடைந்தனர்.
வேன் டிரைவரிடம் உரிமம் இல்லை. ஓட்டுனர் உரிமம் பெறாத ஒருவரை வேன் ஓட்ட அனுமதித்ததற்காக, அந்த வேன் உரிமையாளர் மற்றும் பள்ளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த ஓராண்டில் ஆட்டோ, வேன்கள், அரசு பஸ்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை அளிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். விதிமுறைகளை மீறும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 3ம் தேதி நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பவத்துக்கு காரணமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் பானுமதி, பால்வசந்தகுமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், புதிய மனு ஒன்றை போக்குவரத்துத் துறை கமிஷனருக்கு மனுதாரர் அளிக்க வேண்டும். அதை பெற்ற பின், சட்டப்படி தேவையான நடவடிக்கையை போக்குவரத்துத் துறை கமிஷனர் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.