மெட்ரிக் மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய அறிவுரை
மெட்ரிக் மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய அறிவுரை
UPDATED : டிச 22, 2009 12:00 AM
ADDED : டிச 22, 2009 01:25 PM
வரும் மார்ச் 23ம் தேதி மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் துவங்க உள்ளன. இத்தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் பட்டியல், அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பட்டியலை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய தேர்வுத்துறை, பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், இன்ஷியல், பிறந்ததேதி உட்பட விவரங்களை இறுதியாக சரிபார்த்து அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி எழுத்தர் மட்டுமின்றி, இரு அணிகள் சரிபார்த்து, சரிபார்த்தவர்களின் பெயர், பதவி, கையெழுத்துடன் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாணவர், பெற்றோர், ஆசிரியர் உறுதிமொழியுடன் பெறப்பட்ட தகவல் படிவம், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும். இப்பணியில் ஏற்படும் தவறுகள், குறிப்பாக பெயர், இன்ஷியல், எழுத்துப்பிழை, பிறந்ததேதி ஆகியவை, மாணவரின் மதிப்பெண் சான்றிதழில் பிரதிபலிக்கும் என்பதால், 100 சதவீதம் தவறின்றி பணியை மேற்கொள்ள வேண்டும்.
திருத்தங்கள், நீக்கம், சேர்க்கை பட்டியலில் சிவப்பு மையால் தெளிவாக பெரிய எழுத்துக்களில் செய்யப்பட வேண்டும். எந்தப்பகுதியில் திருத்தம் செய்ய வேண்டுமோ, அந்த காலத்தில் திருத்தி, அம்மாணவரின் பெயர் எதிரே, ஆர் எனவும்; சேர்க்கை செய்யப்பட்டால் வலது ஓரத்தில் ஏ என சிவப்பு மையால் குறிப்பிட வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர், வேறு பள்ளியில் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால், அவ்விபரமும் இணைக்க வேண்டும். நீக்கம் செய்திருந்தால், ஓ என குறிப்பிட்டு, அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும்.
பட்டியலின் கடைசி பக்கத்தில், தலைமை ஆசிரியர் சான்றளிப்பு செய்ய வேண்டும். இதில் ஏற்படும் தவறுகளுக்கு, தலைமை ஆசிரியரே பொறுப்பாவார். பள்ளி முதல்வர்கள், திருத்தம் செய்த பட்டியலை மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகத்தில், டிச., 29க்குள் ஒப்படைக்க வேண்டும்; தபால் மூலம் அனுப்பக் கூடாது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
