மந்த மாணவர்களை கழித்து கட்டும் மெட்ரிக் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
மந்த மாணவர்களை கழித்து கட்டும் மெட்ரிக் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
UPDATED : ஜன 08, 2010 12:00 AM
ADDED : ஜன 08, 2010 01:49 PM
வரும் மார்ச்சில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதற்காக மாணவர்களை தயார்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக தேர்ச்சி விகிதத்திற்காக சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
அதிக மதிப்பெண், தேர்ச்சி விகிதத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கருதினால், அந்த மாணவர்களை பள்ளி சார்பில் தேர்வுக்கு அனுப்பாமல் கழித்து கட்டும் பணிகளும் நடக்கும். சரியாக படிக்காத மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் (டி.சி.,) கொடுத்து, தனித்தேர்வராக தேர்வு எழுத வற்புறுத்துவர்.இதனால் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு, தேர்வில் தோல்வி அடைகின்றனர்.
இதுகுறித்து தொடர்ந்து புகார் எழுந்த போதும், பள்ளிகள் கண்டுகொள்வதில்லை.மாணவர்களை பாதிக்கும் இச்செயலில் ஈடுபடக்கூடாது என பள்ளிகளை, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் மணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்புவது; 9 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களை நடத்துவது விதிமுறைக்கு புறம்பானது. இது போன்ற செயலில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கண்காணித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
