ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர்கள் மீது தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர்கள் மீது தாக்குதல்
UPDATED : ஜன 27, 2010 12:00 AM
ADDED : ஜன 27, 2010 10:12 AM
மெல்போர்ன் நகரில் இந்திய மாணவர்கள் இருவர், ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி ஆஸ்திரேலிய போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இருபது மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இந்திய மாணவர்கள் இருவர், எங்களிடம் புகார் கொடுத்தனர். அதில், மெல்போர்னின் மத்திய பகுதியில் உள்ள சுவான்ஸ்டன் தெருவில், தங்களை ஒரு கும்பல் தாக்கியதாக தெரிவித்தனர்.இருவரில் 20 வயதுடைய மாணவரின் இடது காதில் கூர்மையான ஆயுதம் கொண்டு கும்பல் தாக்கியுள்ளது. மற்றொருவரின் முன்கையில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பலத்த காயமடைந்தவர் அருகிலுள்ள வின்சென்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கைதான ஒன்பது பேரில் ஐந்து பேர், ஏப்ரல் 5ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதி நால்வரும், விசாரணை முடிந்த பின் ஜாமீனில் விடுவிக்கப்படுவர்.இவ்வாறு போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதும், இந்திய மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2009ல் மட்டும் இந்தியர்களைத் தாக்கியதாக 100 வழக்குகள் பதிவாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன், நிதின் கார்க் என்ற இந்திய மாணவன், மெல்போர்ன் நகரின் யாராவில்லி பகுதியில் குத்திக் கொல்லப்பட்டான். இதைத் தொடர்ந்து வேறு சில தாக்குதல் சம்பவங்களும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
